உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / தயாரிப்பாளர் சங்கத்தின் வருவாய் பகிர்வு - நடிகர்கள் ஏற்பார்களா?

தயாரிப்பாளர் சங்கத்தின் வருவாய் பகிர்வு - நடிகர்கள் ஏற்பார்களா?


தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்தின் பொதுக்குழு கூட்டம் இன்று சென்னையில் நடைபெற்றது. அதில் முக்கிய தீர்மானமாக மீடியம் மற்றும் பெரிய பட்ஜெட் திரைப்படங்கள் வருவாய் பகிர்வு முறையில் மட்டுமே தயாரிப்பது என்ற முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

அதன் மூலம் நடிகர்களுக்கு கோடிகளில் சம்பளம் வழங்கப்பட மாட்டாது. மாறாக படம் தயாரிக்கப்பட்டு, படம் வெளியாகி அதன்பின் லாபம் வந்தால் அந்த வருவாயில் அவர்களுக்கு குறிப்பிட்ட சதவீதத் தொகையை சம்பளமாகத் தருவார்கள். ஒருவேளை படம் ஓடவில்லை என்றால் நடிகர்களுக்கு குறைவான சம்பளம் கிடைக்கலாம் அல்லது கிடைக்காமலும் போகலாம்.

ஏற்கெனவே பேசிய தொகையை சில தயாரிப்பாளர்கள் சம்பளமாகத் தருவதில்லை என்ற குற்றச்சாட்டு நடிகர்கள், நடிகைகளிடம் காலம் காலமாக இருக்கிறது. அப்படியிருக்கையில் வருவாய் பகிர்வு என்று வரும் போது சரியான கணக்கு காட்டப்படுமா என்ற கேள்வியும் எழும்.

ஏற்கெனவே தியேட்டர்காரர்கள் சரியான கணக்கு காட்டுவதில்லை என வினியோகஸ்தர்களும், வினியோகஸ்தர்கள் சரியான கணக்கு காட்டுவதில்லை என தயாரிப்பாளர்களும் குற்றம் சாட்டி வருகிறார்கள். எல்லா கணக்கையும் ஒரு சில வாரங்களில் முடிக்கவும் வாய்ப்பில்லை. அதற்கு சில மாதங்கள் ஆகலாம். எனவே, நடிகர்கள் ஒரு படத்தில் நடிப்பதற்கு சில வருடங்கள் சம்பளம் வாங்காமல் காத்திருக்க வேண்டிய நிலை வரலாம்.

ரஜினி, கமல், அஜித், சூர்யா, விக்ரம், தனுஷ், சிம்பு, சிவகார்த்திகேயன் போன்ற நடிகர்கள் இதை ஏற்றுக் கொள்வார்களா என்பதுதான் முக்கியமான கேள்வி. அவர்கள் நடிக்கும் படங்கள்தான் பெரிய படங்களாக உருவாகின்றன.

எந்தவிதமான கட்டுப்பாடுகளை விதித்தாலும் அதை மீறுவதை சிலர் செய்வது வழக்கம். தயாரிப்பாளர் சங்கத்திடம் நடிகர்களுக்கு சம்பளம் தரவில்லை என்று சொல்லிவிட்டு, தனி கணக்காக சம்பளம் கொடுத்தால் அதைத் தடுக்க முடியுமா என்பதும் சந்தேகம்தான்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !