உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / பிளாஷ்பேக்: எம் ஜி ஆருடன் நடிகர் ஜெய்சங்கர் இணைந்து நடிக்க இருந்த “ஒரு தாய் மக்கள்”

பிளாஷ்பேக்: எம் ஜி ஆருடன் நடிகர் ஜெய்சங்கர் இணைந்து நடிக்க இருந்த “ஒரு தாய் மக்கள்”


எம் ஜி ஆர் உச்ச நடிகராக தமிழ் திரையுலகில் கோலோச்சியிருந்த காலங்களில், அவரோடு சமகாலத்தில் பயணித்த சில முன்னணி திரைக் கலைஞர்கள் அவருடன் இணைந்து நடிக்கவில்லை என்பது சினிமாவை நேசிக்கும் அனைவரும் அறிந்ததே. நடிகர்கள் ரவிச்சந்திரன், ஸ்ரீகாந்த், வெண்ணிற ஆடை மூர்த்தி என எம் ஜி ஆரோடு இணைந்து நடிக்காத சில முன்னணி திரைக்கலைஞர்கள் வரிசையில் மிக முக்கியமான ஒரு நடிகராக பார்க்கப்படுபவர்தான் தென்னகத்து ஜேம்ஸ்பாண்ட் என அழைக்கப்படும் நடிகர் ஜெய்சங்கர். இவரும் எம் ஜி ஆரும் இணைந்து நடிக்கும் ஓர் அரிய வாய்ப்பு அமையப் பெற்றும், அது நிறைவேறாமல் போனதுதான் துரதிர்ஷ்டம். 1960களின் பிற்பகுதியில் ஆரம்பிக்கப்பட்ட ஒரு திரைப்படத்தில்தான் நடிகர் ஜெய்சங்கர், எம் ஜி ஆரோடு இணைந்து நடிப்பதாக இருந்தது.

'கலைவாணர்' என் எஸ் கிருஷ்ணனின் சகோதரரும், “புனர் ஜென்மம்” என்ற சிவாஜி திரைப்படத்தின் தயாரிப்பாளருமான என் எஸ் திரவியம் மற்றும் 'கலைவாணர்' என் எஸ் கிருஷ்ணனின் மனைவியும், நடிகையுமான டி ஏ மதுரம் அவர்களின் சகோதரர் டி ஏ துரைராஜும் இணைந்து தயாரிக்க, 1964ம் ஆண்டு, நடிகர்கள் ராஜேந்திர குமார், சாயிரா பானு, தர்மேந்திரா ஆகியோரது நடிப்பில் வெளிவந்து, மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படமான “ஆயி மிலன் கி பேலா” என்ற ஹிந்தி திரைப்படத்தை எம் ஜி ஆர், சரோஜாதேவி, ஜெய்சங்கர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க, தமிழில் மறு உருவாக்கம் செய்ய இருந்தனர். எம் ஜி ஆரின் ஆஸ்தான இயக்குனர்களில் ஒருவரான இயக்குநர் கே சங்கர் இயக்குவதாகவும், வசனத்தை ஆரூர்தாஸ் எழுதுவதாகவும் இருந்தது.

ஓரிரு நாட்கள் படப்பிடிப்பு நடந்திருந்த நிலையில், திடீரென படப்பிடிப்பு கைவிடப்பட, பின் எம் ஜி ஆரும் துப்பாக்கியால் சுடப்பட்டு, மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த நிலையில் முற்றிலுமாக இத்திரைப்படத்திற்கான படப்பிடிப்பும் நின்று போனது. பின்னர் மீண்டும் 1960களின் பிற்பகுதியில் இத்திரைப்படத்திற்கான வேலைகள் ஆரம்பிக்கப்பட்டபோது, படத்தின் நாயகியாக ஜெயலலிதாவும், நடிகர் ஜெய்சங்கருக்குப் பதிலாக நடிகர் முத்துராமனும், வசனகர்த்தாவாக கே சொர்ணமும், படத்தின் இயக்குநராக எம் ஜி ஆரை வைத்து அதிக திரைப்படங்களை இயக்கிய இயக்குநர் ப நீலகண்டனும் நியமிக்கப்பட்டு, “நாஞ்சில் புரொக்ஷன்ஸ்” என்ற தயாரிப்புப் பதாகையின் கீழ் “ஒரு தாய் மக்கள்” என்ற பெயரில் தயாரித்து வெளியிட்டிருந்தனர் அதன் தயாரிப்பாளர்களான என் எஸ் திரவியமும், டி ஏ துரைராஜும்.

மிக நீண்ட கால தயாரிப்பில் இருந்த இந்த “ஒரு தாய் மக்கள்” திரைப்படம், 1971ம் ஆண்டு டிசம்பர் 9 அன்று வெளிவந்தது. மெல்லிசை மன்னர் எம் எஸ் விஸ்வநாதனின் இசையமைப்பில் பாடல்கள் அனைத்தும் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்திருந்த போதும் படம் வசூல் ரீதியாக ஒரு தோல்விப் படமாகவே அமைந்திருந்தது. ஆரம்பத்தில் திட்டமிட்டிருந்த படியே படப்பிடிப்பில் தடையேதும் ஏற்படாமல் இருந்திருந்தால் மக்கள் திலகம் எம் ஜி ஆரோடு, மக்கள் கலைஞர் ஜெய்சங்கர் இணைந்து நடித்திருந்த ஒரு திரைப்படமாக ரசிகர்களுக்கு விருந்து படைத்திருக்கும் இந்த “ஒரு தாய் மக்கள்”.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !