ஏமாற்றியதாக கண்ணீர் விட்ட நடிகை : நடந்ததை விளக்கிய ‛எருமைசாணி' புகழ் விஜய்
யு டியூப்பில் எருமை சாணி சேனலில் நகைச்சுவை வீடியோக்களின் மூலம் பிரபலமானவர் விஜய் குமார். ஒரு சில படங்களில் நகைச்சுவை கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். குறிப்பாக டி பிளாக் என்கிற படத்தை இயக்கியுள்ளார் விஜய். தற்போது ஹாட்ஸ்டாரில் ரெசார்ட் என்கிற வெப் தொடரில் நடித்து வருகிறார். இப்போது அவர் மீது ஒரு மலையாள நடிகை அனுகிரஹா சில குற்றச்சாட்டுகளை வீடியோவின் மூலம் முன்வைத்துள்ளார்.
அதில், ரெசார்ட் இணையத் தொடருக்காக ஓராண்டு ஒப்பந்தம் செய்துவிட்டு, படப்பிடிப்பு நடத்தாமலும், சம்பளம் தராமலும் தன்னை வஞ்சித்ததாக அவர் கண்ணீருடன் வீடியோ பதிவு செய்துள்ளார். மேலும் அந்த படப்பிடிப்பு தளத்தில் தரமற்ற உணவு வழங்கப்படுவதாகவும், உடல்நலம் பாதிக்கப்பட்டபோது விஜய் குமாரின் மனைவி தன்னை மிக கேவலமாக பேசியதாகவும் அவர் பல குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். இளம் கலைஞர்களை மிரட்டும் இந்த தயாரிப்பு நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் கோரிக்கையும் வைத்துள்ளார்.
இந்த வீடியோ வைரலாக இந்த குற்றச்சாட்டை விஜய் மற்றும் அவரது மனைவி மறுத்துள்ளனர். விஜய் வெளியிட்ட வீடியோவில், ‛‛நடித்த தேதி வரை அந்த பொண்ணுக்கு பணம் தரப்பட்டுள்ளது. இதுதவிர கஷ்டமாக இருக்கிறது என சொல்லி 25 ஆயிரம் அட்வான்ஸ் தொகையும் பெற்றுள்ளார். இதை இல்லை என அவர் மறுக்க முடியுமா. கண்ணீர் விட்டு வீடியோ வெளியிட்டு பொய் சொல்கிறார். அவருக்கு வேறு ஒரு படத்தில் நடிக்க வாய்ப்பு வந்தது. அவரை படக்குழுவினர் மகிழ்ச்சியாக அனுப்பி வைத்தோம். அன்றைக்கு அவர் நடிக்க வேண்டிய காட்சி நடக்கவில்லை. ஒரே ஒரு சீன் மட்டும் நடித்தார். அதற்கு கூட அவருக்கு பணம் தரப்பட்டுள்ளது. இப்போது ஒரு படத்தில் லீடு ரோலில் நடிக்கிறார். அதில் நடிக்கும்போது இந்த வெப்சீரிஸில் தனக்காக காட்சி முக்கியத்துவம் இல்லாமல் இருந்தால் நன்றாக இருக்காது என்பதற்காக இதில் தனது ரோலை மாற்றும்படி கூறுகிறார். அவரை ஒப்பந்தம் செய்யும்போது அவருக்கு என்ன வேடம் சொல்லி நடிக்க வைத்தோமோ அதை தான் எடுத்துள்ளோம். இப்போது வந்து மாற்று என்று சொன்னால் என்ன செய்வது.
இவ்வாறு விஜய் தெரிவித்துள்ளார்.