ரியா சக்கரவர்த்தியின் முடக்கப்பட்ட வங்கி கணக்குகளை மீண்டும் திறக்க அனுமதித்த நீதிமன்றம்
கடந்த 2020ல் பாலிவுட் இளம் நடிகரான சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் தற்கொலை மரணம் மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது. இவரது சாவில் மர்மம் உள்ளதாக பல குற்றச்சாட்டுகளை எழுப்பினார்கள். இவர் மரணத்தில் தொடர்பு இருப்பதாக கூறி அவரது காதலியும் நடிகையுமான ரியா சக்கரவர்த்தி விசாரணை வளையத்திற்குள் கொண்டுவரப்பட்டு, சுஷாந்த் சிங்குக்கு போதைப்பொருள் வரவழைத்துக் கொடுத்த குற்றத்திற்காக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். கிட்டத்தட்ட ஒரு வருட சிறைவாசத்திற்கு பிறகு அவர் ஜாமினில் விடுதலையாளர். அதே சமயம் அவர் மீது வழக்கு இருந்ததால் அவர் வெளிநாடு செல்லக்கூடாது என்று அவரது பாஸ்போர்ட் மற்றும் வங்கி கணக்குகள் முடக்கப்பட்டிருந்தன.
கடந்த அக்டோபர் மாதம் தான் ரியா சக்கரவர்த்தியிடம் அவரது பாஸ்போர்ட் திரும்ப ஒப்படைக்கப்பட்டது. இந்த நிலையில் கடந்த சனிக்கிழமை இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் ரியா சக்கரவர்த்தி மற்றும் அவரது சகோதரர் ஆகியோரின் வங்கிக் கணக்குகள் முடக்கம் நீக்கப்படுவதாக கூறி உத்தரவிட்டுள்ளது. வழக்கு நிலுவையில் இருந்தாலும் பாஸ்போர்ட் மற்றும் வங்கி கணக்குகள் திரும்பவும் ரியாவுக்கு கிடைத்தது ஆறுதலான விஷயம்தான்.