உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / பிளாஷ்பேக்: முதன்மைக்கும், புதுமைக்கும் அடிக்கோடிட்ட “மாடர்ன் தியேட்டர்ஸ்” டி ஆர் சுந்தரத்தின் “சதி அகல்யா”

பிளாஷ்பேக்: முதன்மைக்கும், புதுமைக்கும் அடிக்கோடிட்ட “மாடர்ன் தியேட்டர்ஸ்” டி ஆர் சுந்தரத்தின் “சதி அகல்யா”


லண்டனில் மேற்படிப்பு படித்து இந்தியா திரும்பி, 1933லிருந்தே தமிழ் சினிமாத் தொழிலில் ஈடுபட்டு வந்தவர்தான் சேலம் “மாடர்ன் தியேட்டர்ஸ்” அதிபரான இயக்குநர் டி ஆர் சுந்தரம். ஆரம்பத்தில் சேலம் “ஏஞ்சல் பிலிம் கம்பெனி” என்ற நிறுவனத்தில் ஒரு பங்குதாரராக இருந்து, இரண்டு திரைப்படங்களைத் தயாரித்து, பின் 1937ம் ஆண்டு “மாடர்ன் தியேட்டர்ஸ்” என்ற தயாரிப்பு நிறுவனத்தை ஆரம்பித்து, அதற்கான படப்பிடிப்புத் தளத்தையும் சேலத்திலேயே உருவாக்கினார். அப்படி அவர் உருவாக்கிய அந்த மாபெரும் “மாடர்ன் தியேட்டர்ஸ்” ஸ்டூடியோவில் உருவான முதல் திரைக்காவியம்தான் இந்த “சதி அகல்யா”.

1937ல் வெளிவந்த இத்திரைப்படம், கௌதம மகரிஷியின் மனைவி அகல்யாவைப் பற்றிய கதை. அவள் தன் கணவனுக்கு துரோகம் செய்ததாக நினைத்து, அவன் அவளை கல்லாக்கி விட, பின் ஸ்ரீராமரின் பாதங்கள் அந்தக் கல்லின் மேல் பட்டு, மீண்டும் அவள் பழைய நிலையை அடைவதாக வரும் இந்தப் புராணக் கதையின் நாயகியாக, அகல்யையாக இயக்குநர் டி ஆர் சுந்தரத்தால் அறிமுகம் செய்து வைக்கப்பட்டவர்தான் கே தவமணி தேவி என்ற நடிகை. எழிலான, எடுப்பான தோற்றத்தைக் கொண்டிருந்த இந்த நடிகை அண்டை நாடான இலங்கையைச் சேர்ந்தவர். அந்தக் காலத்திலேயே வெளிநாட்டு நடிகையை தமிழில் அறிமுகம் செய்து வைத்து, ஒரு புதுமையைப் படைத்திருந்தார் இயக்குநர் டி ஆர் சுந்தரம்.

நடிக்க வந்த கையோடு, அப்போது இங்குள்ள பத்திரிகைகளுக்கு பேட்டி ஒன்றையும் கொடுத்திருந்தார் நடிகை கே தவமணி தேவி. அந்தப் பேட்டியை ஏற்பாடு செய்திருந்தவரும் இயக்குநர் டி ஆர் சுந்தரமே. அந்தப் பேட்டியில் குடும்பப் பெண்கள் தாராளமாக சினிமாவில் நடிக்க வேண்டும் என அவர் கூறியிருந்ததோடு, இலங்கையில் நீச்சல் உடையில் எடுத்திருந்த அவரது கவர்ச்சியான புகைப்படத்தையும் விளம்பரத்திற்காக தந்திருக்கின்றார். மேலும் பழம்பெரும் திரைப்பட நடிகையும், பின்னணிப் பாடகியுமான யு ஆர் ஜீவரத்னம் தனது கலையுலக வாழ்க்கையை இத்திரைப்படத்தின் மூலமாகத்தான் ஆரம்பித்திருக்கின்றார். அவர் தனது முதல் பாடலை இத்திரைப்படத்தில்தான் பாடியிருக்கின்றார்.

இப்படி பின்னாளில் தமிழ் திரையுலகில் வந்த பல புதுமைகளுக்கும், முதன்மைகளுக்கும் அன்றே தனது “சதி அகல்யா” திரைப்படத்தின் மூலம் அடிக்கோடிட்டு காண்பித்தவர் இயக்குநர் டி ஆர் சுந்தரம். 1937ம் ஆண்டு வெளிவந்த இத்திரைப்படத்தின் துவக்க விழாவை தலைமை தாங்கி நடத்தி வைத்தவர் அன்றைய காங்கிரஸ் தலைவியான ருக்மணி லட்சுமிபதி. 1937 மார்ச் மாதம் வெளிவந்த இத்திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்ற ஒரு வெற்றித் திரைப்படமாகவும் அமைந்திருந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !