உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / பிளாஷ்பேக் : தவறான வாழ்க்கையால் சினிமாவை இழந்த மாதுரி

பிளாஷ்பேக் : தவறான வாழ்க்கையால் சினிமாவை இழந்த மாதுரி

குடும்ப பாங்காகவும் இருப்பார்கள், அதே நேரத்தில் கவர்ச்சியாகவும் இருப்பார்கள். இப்படியான நடிகைகள் ஒவ்வொரு காலத்திலும் தோன்றிக் கொண்டே இருப்பார்கள். அந்தக் காலத்தில் ராஜகாந்தம், டி.ஆர்.ராஜகுமாரி அதற்குபிறகு எம்.என்.ராஜம், பிற்காலத்தில் நமீதா, ஹன்சிகா இப்படி நிறைய உதாரணங்கள் உண்டு. அந்த வரிசையில் 1980களில் தமிழ் சினிமாவில் உலா வந்தவர் மாதுரி.

மலையாள சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக நடித்த இவர் 1984ம் ஆண்டு வெளிவந்த 'பாவம் குரூரன்' என்ற படத்தில் நாயகியாக நடித்தார். இதில் கணவன் இருக்கும்போதே வீட்டு வேலைக்கார சிறுவனுடன் தொடர்பு வைத்துள்ள ஒரு பெண்ணாக நடித்தார். இந்த முதல் பட கேரக்டரே அவருக்கு தனி அடையாளமாகி போனது. இந்த படம் தமிழில் 'பாவம் கொடூரன்' என்ற பெயரில் வெளியாகி இங்கும் வசூலை குவித்தது. மாதுரியை தமிழுக்கும் அறிமுகப்படுத்தியது. 'பாவம் குரூரன்' படத்தைத் தொடர்ந்து, மலையாளத்தில் மாதுரி நடித்த 'சத்ரு', 'என்டே சபதம்' மற்றும் 'ஒருக்கல் ஒரிடத்து' ஆகிய படங்களிலும் இதே போன்ற கேரக்டரிலேயே நடித்தார்.

பிரியதர்ஷன் எழுதி இயக்கிய, மோகன்லால் நடித்த 'போயிங் போயிங்' படத்திலும் மாதுரி கவர்ச்சியாகத்தான் நடித்தார். 1980களில் தமிழ் மற்றும் மலையாள ரசிகர்களிடையே நடிகை மாதுரி மிகுந்த புகழ் பெற்றிருந்தார்.

ரஜினிகாந்த், விஜயகாந்த், பிரபு, சத்யராஜ், கார்த்திக், ராமராஜன், மோகன்லால் மற்றும் பாண்டியன் போன்ற அன்றைய முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்தார். வெளிச்சம், மேகம் கருத்திருக்கு, அவள் மெல்ல சிரித்தாள், ஒரே ரத்தம், மைக்கேல் ராஜ், இவர்கள் இந்தியர்கள், பரிஷம் போட்டாச்சு, கைநாட்டு, குற்றவாளி, சூரசம்ஹாரம், வசந்தி, சிவா, சகாதேவன் மகாதேவன் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட படங்களில் இவர் நடித்துள்ளார்.

ஒரு கட்டத்தில் கவர்ச்சியாக நடிப்பதை குறைத்துக் கொண்ட மாதுரி, பெண்மணி அவர் கண்மணி, சகலகலா சம்பந்தி, சம்சாரம் அது மின்சாரம், மனைவி ஒரு மந்திரி, அடுத்து வீடு உள்ளிட்ட பல படங்களில் குடும்ப பாங்கான கேரக்டர்களில் நடித்தார். ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான 'மனிதன்' திரைப்படத்தில், ரஜினிகாந்தின் சகோதரி கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். 1988ம் ஆண்டில் மட்டும், 25-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்தார். 1995ம் ஆண்டிற்குப் பிறகு, மாதுரி திரையுலகிலிருந்து முழுமையாக விலகிவிட்டார்.

பல வருடங்களுக்கு பிறகு அவர் விபச்சார வழக்கில் கைது செய்யப்பட்ட செய்திகள் வெளியானது. பின்னர் அவரைப் பற்றிய எந்த தகவலும் இல்லை. முன்னணி நடிகையாக இருந்தபோதும் தான் நடித்த படங்களின் கேரக்டர்களுக்கேற்றவாறு நடித்து புகழ்பெற்றவர். தன் வாழ்க்கையை திட்டமிட்டு அமைத்திருந்தால் இப்போதும் ஒரு முக்கிய நடிகையாக வலம் வந்திருப்பார். தவறான பாதையை தேர்ந்தெடுத்ததால் சினிமா வாழ்க்கையை இழந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !