'கருப்பு' குழுவினர் மீது த்ரிஷா கோபம்?
ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில், சாய் அபயங்கர் இசையமைப்பில், சூர்யா, த்ரிஷா மற்றும் பலர் நடித்துள்ள படம் 'கருப்பு'. இப்படத்தின் இசை வெளியீட்டு விழா கடந்த வாரம் மதுரையில் நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியில் படத்தின் கதாநாயகியான த்ரிஷா கலந்து கொள்ளவில்லை. அதன் காரணம் என்ன என்பது தெரியவில்லை.
நேற்று இரவு தயாரிப்பு நிறுவனம் படத்தின் நாயகியான த்ரிஷாவின் கதாபாத்திர அறிமுக வீடியோ ஒன்றை வெளியிட்டது. அதைப் பகிர்ந்த ரசிகர் ஒருவர், “அட, ஆமாம்…த்ரிஷா இதில் நடித்திருக்கிறார் என்பதை நான் மறந்துவிட்டேன். அவர் பார்ப்பதற்கு எவ்வளவு இளமையாக இருக்கிறார் என்பதைப் பற்றி நாம் பேசலாமா…நிஜமாகவே அவர் வயது கூடாமல் இளமையிலேயே உறைந்த போனது போல் இருக்கிறார். அப்புறம், 'கருப்பு' படத்திற்கு முன்பு சூர்யாவுடன் த்ரிஷா இணைந்து நடித்த கடைசிப் படம் எது ?,” என்று பதிவிட்டிருந்தார்.
இந்தப் பதிவில் அவர் த்ரிஷாவை 'டேக்' கூட செய்யவில்லை. இருந்தாலும் அந்தப் பதிவிற்கு த்ரிஷா கமெண்ட் செய்திருந்தார். “நன்றி, நானும் மறந்துவிட்டேன். இப்போதாவது அவர்கள் ஒரு நினைவூட்டலை செய்திருக்கிறார் என்பதை அறிந்து மகிழ்ச்சி,” என்று பதிவிட்டுள்ளார்.
அதற்கு மற்றொரு ரசிகர், “நீங்கள் செல்ல வேண்டிய ஒரு இசை வெளியீட்டு விழா இல்லையா…உங்களுக்கு உண்மையில் இந்த சூழ்ச்சி தேவையா..?,” என்று கமெண்ட் செய்ய, அதற்கு த்ரிஷா, “மெயிலில் எனக்கான அழைப்பு தொலைந்துவிட்டது என நினைக்கிறேன்,” என்று பதிலளித்திருக்கிறார்.
'கருப்பு' இசை நிகழ்ச்சிக்கு த்ரிஷாவை அழைத்தார்களா இல்லையா என்ற சந்தேகம் தற்போது எழுந்துள்ளது. மேலும் தனது சமூக வலைதள கணக்குகளில் 'கருப்பு' பற்றி எதையும் பதிவிடாமல் தவிர்த்து வருகிறார் த்ரிஷா.