பிளாஷ்பேக்: ஊட்டியில் படமான முதல் படம்
தமிழகத்தின் குளிர் மலைபிரதேசமான ஊட்டியில் ஆயிரம் படங்களுக்கு மேல் தயாராகி உள்ளது. இயக்குனர் பாலுமகேந்திரா போன்றவர்கள் தங்கள் படங்களை ஊட்டியில்தான் படமாக்கினர். வண்ணப் படங்கள் வரத் தொடங்கிய காலத்தில் ஒரு பாடல் காட்சியையாவது ஊட்டியில் படமாக்கி விடுவார்கள்.
'மாங்கல்ய பலம்' என்ற தெலுங்கு படம், 'மஞ்சள் மகிமை' என்ற பெயரிலும் ஒரே நேரதத்தில் தயாரானது. இந்த படம் பெங்காலியில் வெளிவந்த 'அக்னி பரிக்ஷா' என்ற படத்தின் ரீமேக். இதனை ஆத்ருத்தி சுப்பராவ் தயாரித்து, இயக்கினார். மாஸ்டர் வேனு இசை அமைத்தார். அக்னினேனி நாகேஸ்வரராவ், சாவித்ரி, ராஜசுலோச்சனா, சூர்யகாந்தம், எஸ்.வி.ரங்காராவ் நடித்தார்கள். தமிழ் பதிப்பில் கூடுதலா கே.ஏ.தங்கவேலுவும், கே.பாலாஜியும் நடித்தார்கள்.
சிறுவர்களாக இருக்கும்போதே நாயகனுக்கும், நாயகிக்கும் திருமணம் செய்து வைத்து விடுகிறார்கள். இதனால் கோபம் அடைந்த பெண்ணின் தந்தை தன் மகளை மலைபிரதேசம் ஒன்றுக்கு அழைத்துச் சென்று விடுகிறார். அந்த பிரதேசத்திற்கு பணி நிமித்தமாக வரும் நாயகன், நாயகிகையை கண்டு காதலிக்கிறார். ஏற்கெனவே திருமணமானவர்கள் என்பது தெரியாமலேயே இந்த காதல் நடக்கும். இந்த விஷயம் தெரிய வரும்போது என்ன நடக்கிறது என்பதுதான் படத்தின் கதை. பெரும்பகுதி கதை மலைபிரதேசத்தில் நடப்பதால் இந்த படம் ஊட்டியில் படமானது.