உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / பிளாஷ்பேக்: 35 ஆண்டுகளை நிறைவு செய்து தீபாவளியை நினைவு கூறும் 'தளபதி'

பிளாஷ்பேக்: 35 ஆண்டுகளை நிறைவு செய்து தீபாவளியை நினைவு கூறும் 'தளபதி'


1991ம் ஆண்டு முதன் முதலாக ரஜினிகாந்த், இயக்குநர் மணிரத்னத்தோடு இணைந்து வழங்கிய ஓர் அற்புதக் கலைப்படைப்பாக வந்த திரைப்படம்தான் “தளபதி”. மகாபாரதம் என்ற இதிகாசக் காவியத்தில் வரும் கர்ணன் மற்றும் துரியோதனன் ஆகியோரது நட்பை அடிப்படையாகக் கொண்டு, ஓர் சமூகக் கதை வடிவமைப்பில், இயக்குநர் மணிரத்னம் இயக்கியிருந்த இந்தத் திரைப்படம், அதுவரை நடிகர் ரஜினிகாந்த் நடித்திருந்த அவரது அதிரடி ஆக்ஷன் திரைப்படங்களில் இருந்து முற்றிலும் மாறுபட்ட ஒரு ஆக்ஷன் திரைப்படமாக வெளிவந்து, அவரது ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருந்தது.

1978ம் ஆண்டு வெளிவந்த “முள்ளும் மலரும்” திரைப்படத்தில் 'காளி' என்ற கதாபாத்திரத்தில் ஒரு எதார்த்தமான நடிப்பை வெளிக்காட்டியிருந்த நடிகர் ரஜினிகாந்தை மீண்டும் 1991ல் 'சூர்யா' என்ற கதாபாத்திரத்தில் அதே எதார்த்த நடிப்பை வெளிக்காட்டச் செய்த ஓர் கலைப்படைப்பாக உருவாக்கி வெளியிட்டிருந்தார் இயக்குநர் மணிரத்னம் இந்த “தளபதி” திரைப்படத்தை.

மகாபாரதத்தில் வரும் கர்ணன் என்ற கதாபாத்திரத்திற்கு இணையான 'சூர்யா' என்ற கதாபாத்திரத்தில் நடிகர் ரஜினிகாந்தும், துரியோதனன் கதாபாத்திரத்திற்கு இணையான 'தேவா' என்ற கதாபாத்திரத்தில் நடிகர் மம்முட்டியும் தேர்வாகியிருந்த நிலையில், கர்ணனின் தம்பியரில் ஒருவரும், பஞ்சபாண்டவர்களில் மிக முக்கியமானவருமான 'அர்ஜூனன்' கதாபாத்திரத்திற்கு இணையாக 'அர்ஜூன்' என்ற கதாபாத்திரத்தில் நடிக்கத் தேர்வாகியிருந்தவர்தான் நடிகர் அரவிந்த்சாமி. ஒரு விளம்பரப் படத்தில் நடிகர் அரவிந்த்சாமி நடித்திருந்ததைப் பார்த்த இயக்குநர் மணிரத்னம், அவரை இந்தக் கதாபாத்திரத்திற்காக தேர்வு செய்திருந்தார்.

இதுதான் நடிகர் அரவிந்த்சாமியின் அறிமுகத் திரைப்படம். இந்தக் கதாபாத்திரத்திற்காக ஆரம்பத்தில் நடிகர் ஜெயராமை சிபாரிசு செய்திருந்தார் நடிகர் மம்முட்டி. அவரது தேதி ஒத்து வராததால் இந்தத் திரைப்படத்தில் அவரால் நடிக்க முடியாமல் போனது. மேலும் படத்தின் ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவனுக்கும் இதுதான் முதல் திரைப்படம். படத்திற்கு இசை வடிவம் தந்திருந்தவர் இசைஞானி இளையராஜா. படத்தின் பாடல்கள் எல்லாம் உலக அளவில் பிரசித்திப் பெற்று, இசை உலகில் ஒரு பெரும் புரட்சியையே உண்டு பண்ணியிருந்தது. மேலும் இந்தத் திரைப்படம்தான் இளையராஜா - மணிரத்னம் கூட்டணியில் வந்த இறுதித் திரைப்படமாகவும் அமைந்திருந்தது.

ரஜினிகாந்த், மம்மூட்டி, ஷோபனா, பானுப்ரியா, அரவிந்த்சாமி, ஸ்ரீவித்யா, ஜெய்சங்கர், கீதா, நாகேஷ், அம்ரிஷ்பூரி, கிட்டி, சார்லி, மனோஜ் கே ஜெயன் என பெரும் நட்சத்திரத் திரளே நடித்திருந்த இத்திரைப்படம் 1991ம் ஆண்டு நவம்பர் 5 அன்று தீபாவளி வெளியீடாக வந்திருந்த நிலையில், இதற்குப் போட்டியாக நடிகர் கமல்ஹாசனின் “குணா”, விஜயகாந்தின் “மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும்”, சத்யராஜின் “பிரம்மா”, கே பாக்யராஜ் நடிப்பில் “ருத்ரா”, பிரபு நடிப்பில் “தாலாட்டு கேக்குதம்மா”, ராமராஜனின் “நெஞ்சமுண்டு நேர்மையுண்டு” என ஏறக்குறைய ஒன்பது திரைப்படங்கள் வெளியாகி களத்தில் நிற்க, ரஜினி - மணிரத்னம் கூட்டணியில் வெளிவந்த இந்த “தளபதி” திரைப்படம் அன்று விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் மிகப் பெரிய வெற்றியைப் பெற்று, வாகை சூடியது. இப்படிப் பல மகிழ்வான நினைவுகளை உள்ளடக்கியதும், மணிரத்னம் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த ஒரே திரைப்படமுமான இந்த “தளபதி” திரைப்படம், இந்த தீபாவளி நன்னாளோடு தனது 35வது ஆண்டினை நிறைவு செய்து, தமிழ் திரைப்பட ரசிகர்களின் நெஞ்சங்களில் சிம்மாசனமிட்டு அமர்ந்து, நீக்கமற நிறைந்திருக்கிறது என்றால் அது மிகையன்று.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !