உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / பிளாஷ்பேக்: கே.பாக்யராஜுக்கு போட்டியாக வந்த யோகராஜ்

பிளாஷ்பேக்: கே.பாக்யராஜுக்கு போட்டியாக வந்த யோகராஜ்


முன்னணி நடிகர்களின் சாயலில் இருப்பவர்கள் சினிமாவிற்கு வருவார்கள். காப்பி அடித்து நடிப்பார்கள். சொந்த சரக்கு இல்லாதால் சீக்கிரமே காணாமல் போய்விடுவார்கள். அப்படியானவர்களில் ஒருவர் யோகராஜ்.

தோற்றத்தில் கே.பாக்யராஜ் சாயலில் இருந்த யோகராஜ். அவரைப்போலவே மிமிக்ரி செய்வதும், நடிப்பதுமாக இருந்தார். அதனால் அவரது நண்பர்கள் அவரை சினிமாவில் நடிக்கச் செல் என்று உசுப்பேற்றினார்கள்.

அதை நம்பி அவர் சென்னை வந்தார். சில ஆண்டுகள் தேடுதலுக்கு பிறகு அவருக்கு 'ஊமைக்குயில்' என்ற படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. இளவரசி, தேவி பாலா ஆகிய இரண்டு நாயகிகள் நடித்திருந்த இந்த படத்தில் முழுக்க முழுக்க அவர் பாக்யராஜ் பாணியிலேயே நடித்திருந்தார். அதே கண்ணாடி, அதே நடை, உடை, பாவனை பெயரிலும் கிட்டத்தட்ட ராஜ் என்பதால் பாக்யராஜை பார்த்தது போலவே இவரையும் மக்கள் ரசித்தனர்.

இந்த படம் சுமாரான வெற்றியை பெற்றது. இதனால் பாக்யராஜிடம் கால்ஷீட் கிடைக்காதவர்கள் யோகராஜை வைத்து படம் எடுத்தனர். 'முந்தானை முடிச்சு' படத்திற்கு போட்டியாக 'முந்தானை சபத'ம் என்ற ஒரு படத்தில் நடித்தார். இதுவும் சுமாரான வரவேற்பை பெற்றது. இதனை அடுத்து சம்சாரமே சரணம், காசு தங்க காசு ஆகிய இரண்டு படங்களில் நடித்தார்.

யோகராஜ் நடித்த படங்கள் பெரிதாக தோல்வி அடையவில்லை. என்றாலும் அவர் தனக்கென்று தனி பாணியை உருவாக்கி கொள்ளாமல் பாக்யராஜ் போன்றே நடித்ததாலும். கே.பாக்யராஜ் படங்கள் பெரிய வெற்றிகளை குவித்ததாலும் யோகராஜ் காணாமல் போய்விட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !