சர்ச்சைக்குரிய நீதிமன்ற காட்சிகள்: 'கருப்பு' படத்திற்கு தடை கேட்ட வழக்கு தள்ளுபடி
சூர்யா, திரிஷா, நட்டி நட்ராஜ் நடிப்பில் ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் டிரீம் வாரியர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள 'கருப்பு' படம் கடந்த 15ம் தேதி வெளியானது. இந்த படத்தில் சர்ச்சைக்குரிய நீதிமன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளன. குறிப்பாக நீதிபதியே சமூக விரோதிகளோடு நேரடி தொடர்பில் இருப்பது மாதிரியான காட்சிகள் இருந்தது. நீதிபதியாக நட்டி நட்ராஜ் நடித்திருந்தார்.
இந்நிலையில், நீதித்துறையை விமர்சிக்கும் வகையில் இந்த படம் உள்ளதாகவும் எனவே, கருப்பு திரைப்படத்திற்கு தடை விதிக்க வேண்டும் எனக் கோரி, சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர் ஆர்.எஸ்.தமிழ்வேந்தன் உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்தார். அவர் தாக்கல செய்த மனுவில்,
“கருப்பு படத்தில் ஒவ்வொரு காட்சியும், சுதந்திரமான, தனித்துவமான இந்திய நீதித்துறையை, நீதிமன்றங்களை, நீதிபதிகளை, வழக்கறிஞர்களை அவமதிக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. நீதிபதி கதாபாத்திரம், லஞ்ச நடவடிக்கைகளில் ஈடுபடுவது போலவும், மது அருந்துவது போலவும் காட்சி அமைக்கப்பட்டுள்ளது. படத்தை தொடர்ந்து திரையரங்குகளில் திரையிட அனுமதித்தாலோ, ஓ.டி.டி தளங்களில் வெளியிட அனுமதித்தாலோ அது நீதித்துறை மீது மக்கள் நம்பிக்கை இழக்கச் செய்துவிடும். எனவே, கருப்பு திரைப்படத்தை தொடர்ந்து திரையிட அனுமதிக்க தடை விதிக்க வேண்டும்” என்று கோரியிருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், படத்தில் இடம்பெற்றுள்ள காட்சிகள் பேச்சு சுதந்திர வரம்புக்குள் வரும். அதை தடை செய்ய நீதிமன்றத்துக்கு அதிகாரம் இல்லை. அதோடு படம் முறையாக தணிக்கை சான்றிதழ் பெற்றுள்ளது. எனக் கூறி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.