ஆரம்பித்தபோதே நின்றுபோன ராம்சரணின் கனவுப்படம் ; அதற்கு உயிர் கொடுத்த ‛பெத்தி' இயக்குனர்
தெலுங்கில் ராம்சரண் நடிப்பில் உருவாகியுள்ள ‛பெத்தி' திரைப்படம் வரும் ஜூன் நான்காம் தேதி வெளியாக இருக்கிறது.. ஜான்வி கபூர் கதாநாயகியாக நடித்துள்ள இந்த படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ளார். சமீபத்தில் வெளியான இந்த படத்தின் டிரைலரைப் பார்த்தபோது இது கிரிக்கெட் மற்றும் மல்யுத்தம் என இரண்டு விளையாட்டுகளை மையப்படுத்தி உருவாகி இருப்பது தெளிவாகத் தெரிகிறது. ஆனாலும் மல்யுத்தம் தான் பிரதானம் என்பதும் புரிந்து கொள்ள முடிகிறது.
இந்த நிலையில் கடந்த சில வருடங்களுக்கு முன்பே ராம்சரண் இப்படி ஒரு விளையாட்டு சம்பந்தமான படத்தில் நடிக்க வேண்டும் என்பதை தனது கனவாகவே வைத்திருந்தார். அதற்கேற்றவாறு ‛தூள், கில்லி' படங்களை இயக்கிய இயக்குனர் தரணியின் டைரக்ஷனில் கால்பந்து விளையாட்டை மையப்படுத்தி ‛மெருபு' என்கிற படம் அறிவிக்கப்பட்டு, 10 நாட்கள் படப்பிடிப்பும் நடைபெற்றது. ஆனால் சில காரணங்களால் அந்த படம் கைவிடப்பட்டது.
அப்போது என்ன நடந்தது என சமீபத்திய பேட்டி ஒன்றில் ராம்சரண் கூறும்போது, நாங்கள் அப்போது தேர்ந்தெடுத்த விளையாட்டு கால்பந்து என்பதால் அந்த காலகட்டத்தில் இருந்த கேமரா மற்றும் கிராபிக்ஸ் தொழில்நுட்பங்கள் இப்படி ஒரு விளையாட்டை பிரம்மாண்டமாக காட்சிப்படுத்துவதற்கு போதிய அளவில் ஒத்துழைக்கவில்லை.. அதனால் தான் படம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டு பின்னர் அப்படியே கைவிடப்பட்டது என்று கூறினார்.
அப்போது இயக்குனர் புச்சி பாபு சனா கூறும்போது, தனது கனவு படம் என்று அதை கூறிய ராம்சரண் இது பாதியில் நிறுத்தப்பட்டதை வருத்தத்துடன் ஒரு பேட்டியில் பகிர்ந்து இருந்தார். அப்போதுதான் இப்படி விளையாட்டை மையப்படுத்திய ஒரு கதை என்றதுமே அதை ராம்சரணிடம் சென்று கூறியபோது அதற்கு உடனே கிரீன் சிக்னல் காட்டினார்.. பாதியில் நின்ற அவரது கனவை இந்த பெத்தி படத்தின் மூலம் நான் நிறைவேற்றியுள்ளேன் என்று கூறியுள்ளார்.