400 மில்லியன் பார்வைகளைக் கடந்த 'ஜெயிலர் - காவாலய்யா'
நெல்சன் இயக்கத்தில், அனிருத் இசையமைப்பில், ரஜினிகாந்த், ரம்யா கிருஷ்ணன் மற்றும் பலர் நடிப்பில் 2023ல் வெளிவந்த படம் 'ஜெயிலர்'. அப்படத்தில் தமன்னா சிறப்புத் தோற்றத்தில் நடனமாடிய 'காவாலய்யா' பாடல் வெளிவந்ததுமே ஹிட் ஆனது.
பாடலில் ரஜினிகாந்த் சில வினாடிகள் மட்டுமே வந்தாலும் தமன்னாவின் நடனம் பாடலை சூப்பர்ஹிட்டாக்கிவிட்டது. லிரிக் வீடியோவும், வீடியோ பாடலும் குறுகிய காலத்திலேயே 100 மில்லியன் பார்வைகளைக் கடந்தன.
தற்போது வீடியோ பாடல் 400 மில்லியன் பார்வைகளை யு டியுப் தளத்தில் கடந்துள்ளது. அதன் லிரிக் வீடியோ 250 மில்லியன் பார்வைகளை நெருங்கியுள்ளது.
தமிழில் இதுவரை வெளிவந்த பாடல்களில் 400 மில்லியன் பார்வைகளைக் கடந்த 6வது பாடலாக இப்படம் உள்ளது. 1743 மில்லியன் பார்வைகளுடன் 'ரவுடி பேபி' பாடல் முதலிடத்திலும், 796 மில்லியன் பார்வைகளுடன் 'அரபிக்குத்து' இரண்டாமிடத்திலும், 728 மில்லியன் பார்வைகளுடன் 'டம் டம்' மூன்றாமிடத்திலும், 594 மில்லியன் பார்வைகளுடன் 'ஒய் திஸ் கொலவெறி' நான்காமிடத்திலும், 542 மில்லியன் பார்வைகளுடன் 'அச்சச்சோ' பாடல் ஐந்தாமிடத்திலும் உள்ளன.