உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / ஸ்வேதா மேனன் உள்ளிட்ட மூவர் மீது முதலமைச்சரிடம் புகார் கொடுத்த திரிஷ்யம் நடிகை

ஸ்வேதா மேனன் உள்ளிட்ட மூவர் மீது முதலமைச்சரிடம் புகார் கொடுத்த திரிஷ்யம் நடிகை

மலையாளத்தில் மோகன்லால் நடிப்பில் வெளியான திரிஷ்யம் படத்தில் அவரது மூத்த மகளாக நடித்து பிரபலமானவர் நடிகை அன்சிபா ஹாசன். இவர் கடந்த வருடம் மலையாள நடிகர் சங்கத்திற்கு நடைபெற்ற தேர்தலில் போட்டியின்றி இணைச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். கடந்த சில நாட்களுக்கு முன்பு நடிகர் சங்கத்தில் உள்ள சிலர் மீது குற்றம் சாட்டி தனது பதவியை ராஜினாமா செய்தார். சங்கத்தில் பொறுப்பு வகிக்கும் சிலர் தன் மீது பொய்யாக புகார் அளித்து மன உளைச்சலை ஏற்படுத்தியதுதான் தான் ராஜினாமா செய்ததற்கு காரணம் என்றும் கூறியிருந்தார்.

இந்த நிலையில் தன் மீது காவல்துறையில் பொய் புகார் அளித்த அம்மா அமைப்பின் துணைத் தலைவர் லக்ஷ்மி பிரியா மற்றும் அந்த புகாரை விசாரிப்பதற்காக தன்னை காவல் நிலையத்திற்கு வரவழைத்து டார்ச்சர் செய்த திருப்பணித்துறா காவல் நிலைய பெண் சப் இன்ஸ்பெக்டர் ரேஷ்மா மற்றும் இந்த விவகாரத்தில் ஒருதலைபட்சமாக செயல்படும் நடிகர் சங்கத்தின் தலைவரான நடிகை ஸ்வேதா மேனன் உள்ளிட்ட மூவர் மீது, தனக்கு எதிராக சதி திட்டம் தீட்டியதாகவும் காவல் நிலையத்தில் வைத்து மனரீதியாக துன்புறுத்தியதாகவும் கூறி சமீபத்தில் கேரளாவின் முதல்வராக பொறுப்பேற்ற வி.டி.சதீஷனிடம் புகார் அளித்துள்ளார் அன்சிபா ஹாசன்.

அன்சிபா இப்படி நேரடியாக முதலமைச்சரிடமே புகார் கொடுத்ததை அடுத்து நடிகர் சங்க தலைவரான ஸ்வேதா மேனன், அன்சிபாவிடம் இந்த விவகாரம் குறித்து விசாரிப்பதற்காக அவரை சங்கத்திற்கு வரும்படி அழைப்பு விடுத்துள்ளார். அதற்கு பதில் அளித்த அன்சிபா, ‛‛இந்த விசாரணை கூட்டத்தில் கலந்து கொள்ள தயாராக இருப்பதாகவும் ஆனால் விசாரணை நேர்மையாகவும் வெளிப்படையாகவும் தனக்கு நீதி கிடைக்கும் வகையில் இருக்க வேண்டும்'' என்றும் சில நிபந்தனைகளை விதித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !