பிளாஷ்பேக்: 3 வேடங்களில் காமெடியின் உச்சம் தொட்ட சிவாஜி
தனது குணச்சித்ர நடிப்பால் ரசிகர்களை கதறி அழவைத்த சிவாஜி பல படங்களில் ரசிகர்களை குலுங்க குலுங்க சிரிக்க வைத்திருக்கிறார். அதில் நம்பர் ஒன் படமாக இப்போதும் இருப்பது 'பலே பாண்டியா'. ஒரு கேரக்டருக்குள் நுழைந்து அந்த கேரக்டராகவே வாழ்வதுதான் நிஜமான நடிப்பு, கொஞ்சம் கடினமாக உழைத்தால் இதனை யார் வேண்டுமானாலும் செய்யலாம் ஆனால் ரசிகர்களை சிரிக்க வைப்பது கடினம் என்பார்கள்.
இதனை ஒரு கேரக்டராக மட்டுமல்லாமல் பல கேரக்டராக ஒருவரே நடித்து சிரிக்க வைப்பதுதான் உச்சம், பிற்காலத்தில் கமல்ஹாசன் 'மைக்கேல் மதன காமராஜன்' படத்தில் இதை செய்து காட்டினார். இதற்கு முன்னோடியாக அமைந்த படம் 'பலே பாண்டியா'. மைக்கேல் மதன காமராஜன் படத்தின் அப்போதைய தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டிருந்தது. ஆனால் தொழில்நுட்பம் இல்லாத காலத்தில் வெவ்வேறு குணாதிசயங்கள் கொண்ட 3 கேரக்டரில் நடித்து நடிப்பில் உச்சம் தொட்டவர் சிவாஜி.
பி.ஆர்.பந்துலு இயக்கிய இந்தப் படத்தில் சிவாஜி, 'அப்பாவி' பாண்டியன், ரவுடி மருது மற்றும் விஞ்ஞானி சங்கர் ஆகிய வேடங்களில் நடித்திருந்தார். பாண்டியன் கதாபாத்திரத்தில் சிவாஜியின் நடிப்பு நகைச்சுவை நடிப்பில் அவர் உச்சம் தொட்டதாகவும் அமைந்தது. மருது கதாபாத்திரத்தில், ஒருவித இயல்பான மிரட்டல் தன்மையுடன் நடித்திருந்தார். இன்றைய காமெடி வில்லன்களுக்கு அவர்தான் முன்னோடி. ஆங்கிலம் பேசும் சங்கர் கதாபாத்திரத்தில், சில சொற்றொடர்களைத் திரும்பத் திரும்பப் பேசும் விசித்திரமான மற்றும் மறதி கொண்ட ஒருவராக அவர் சிறப்பாக நடித்திருந்தார்.
இந்த படத்தில் இன்னொரு சிறப்பம்சம் என்னவென்றால், சிவாஜிக்கு நிகராக எம்.ஆர்.ராதா அமிர்தலிங்கம் பிள்ளை மற்றும் கபாலி ஆகிய இரு வேடங்களில் நடித்திருப்பார். இவர்களுடன் கே. பாலாஜி, தேவிகா, வசந்தி, சந்தியா ஆகியோரும் நடித்திருந்தனர். இந்த படம் பெரிய வெற்றி பெற்று சிவாஜியின் வெற்றி கோபுரத்தில் இடம் பிடித்தது.