விஸ்வநாத் அண்ட் சன்ஸ் : வியாபார நிலவரம்….
தெலுங்கு தயாரிப்பு நிறுவனமான சித்தாரா என்டர்டெயின்மென்ட் தயாரிக்க, தெலுங்கு இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்க, ஜிவி பிரகாஷ்குமார் இசையமைக்க, சூர்யா, மமிதா பைஜூ, ராதிகா மற்றும் பலர் நடித்துள்ள 'விஸ்வநாத் அண்ட் சன்ஸ்' படம் இன்று உலகம் முழுவதும் வெளியாகி உள்ளது.
இப்படத்தின் வியாபாரம் சூர்யா நடித்து இதற்கு முன்பு வெளிவந்த 'கருப்பு' படத்தை விடவும் அதிகமாக நடந்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. தமிழக வினியோக உரிமை சுமார் 45 கோடிக்கு விற்கப்பட்டுள்ளது. 'கருப்பு' படம் இதில் பாதி அளவுக்குத்தான் விற்கப்பட்டதாகச் சொல்கிறார்கள்.
தெலுங்கு உரிமை 21 கோடி, கர்நாடகா உரிமை 5 கோடி, கேரளா உரிமை 5 கோடி, வெளிநாட்டு உரிமை 16 கோடி என மொத்தமாக 90 கோடிக்கும் மேல் வியாபாரம் நடந்துள்ளதாகத் தகவல்.
அந்தத் தொகையைப் பெற வேண்டுமானால் படம் 200 கோடி வசூலித்தாக வேண்டும். அப்போதுதான் படத்திற்கான 'பிரேக் ஈவன்' கிடைக்கும். 'கருப்பு' படம் 300 கோடிக்கும் அதிகமாக வசூலித்ததால் இவ்வளவு வியாபாரம் நடந்துள்ளதாகத் தகவல்.
இதனிடையே, தமிழகத்தில் சில முக்கிய தியேட்டர்களில் இந்தப் படம் வெளியாவதில் கடைசி நேர சிக்கல் ஏற்பட்டுள்ளது. வினியோகஸ்தர் சொல்லும் விலைக்கு சில தியேட்டர்கள் சம்மதிக்கவில்லையாம். அவர்கள் படத்தைத் திரையிடுவதிலிருந்து பின்வாங்கினர். அதன்பின் அவர்களிடம் நடைபெற்ற பேச்சுவார்த்தைக்குப் பிறகு நள்ளிரவில் ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது.