ரெமோ, அந்நியன், அம்பி... பிரேக்அப் குறித்து குமுறிய அனுபமா
நடிகை அனுபமா பரமேஸ்வரனும், நடிகர் விக்ரமின் மகன் துருவ் விக்ரமும் காதலித்து வந்ததாக பல மாதங்களாக செய்தி வெளியானது. இருவரும் 'பைசன் காளமாடன்' படத்தில் ஒன்றாக நடித்தபோது காதல் மலர்ந்ததாக சொல்லப்படுகிறது. ஆனால், இருவரும் இதுவரை காதலிப்பதாக எந்த இடத்திலும் சொல்லவில்லை.
இந்த நிலையில் சில நாட்களுக்கு முன்னதாக இருவரும் பிரிந்துவிட்டதாகவும் செய்தி பரவியது. இதனை அனுபமா மட்டும் சூசகமாக சொல்லிவந்தார். சமீபத்தில் ஒரு நிகழ்ச்சி மேடையில் பேசியபோது கூட, கடந்த ஆண்டு உணர்ச்சிப்பூர்வமாகத் தனக்கு மிகவும் சவாலானதாக இருந்தது என்றும், ஒரு கட்டத்தில் தன்னைத் தானே தொலைத்து விட்டது போன்ற உணர்வு ஏற்பட்டதாகவும் தெரிவித்திருந்தார்.
மேலும், ‛‛வாழ்வின் பெரும்பாலான நாட்களை மற்றவர்களுக்காகவே வாழ்ந்த பிறகு, இப்போது என் வாழ்க்கையின் முழுக் கட்டுப்பாட்டையும் நான் என் கைக்கு எடுத்துள்ளேன். தற்போது என் மனதில் நிம்மதியும் மகிழ்ச்சியும் நிறைந்த ஒரு நல்ல கட்டத்தில் இருக்கிறேன்'' என்றும் பேசியிருந்தார்.
உளவியல் ரீதியான துன்புறுத்தல்
இந்த நிலையில், யுடியூப் சேனல் ஒன்றிற்கு பேட்டியளித்த அனுபமா, தன் காதல் பிரிவு குறித்து மனம் திறந்துள்ளார். தனது காதலன் பெயரை குறிப்பிடாமல் அவர் கூறியதாவது: இரண்டு வருட வலி. உடல்ரீதியாகவும் மனரீதியாகவும் நான் மிகவும் பாதிக்கப்பட்டிருந்தேன். என்னை நானே மீண்டும் கண்டுபிடித்து, குணமடைய எனக்கு நிறைய நேரம் தேவைப்பட்டது.
நான் அனுபவித்தது சாதாரணமான காதல் பிரச்னை அல்ல. 'Narcissistic Abuse' எனப்படும் உளவியல் ரீதியான கடுமையான துன்புறுத்தல், இதுபோன்ற விஷயங்களை நேரடியாக அனுபவித்தவர்களுக்கு மட்டுமே அதன் வலியும் வேதனையும் தெரியும். காதலிக்கும் போது, காதலின் மீது நம்பிக்கை வைத்து தனிப்பட்ட காயங்களையும், வலிகளையும் பகிர்ந்து கொண்டேன். அப்படி என்னை பற்றிய தகவல்களைக் கேட்டுத் தெரிந்துகொண்டு, அதன்மூலம் ஒரு ஆழமான உணர்ச்சிப்பூர்வமான பிணைப்பை உருவாக்கினார்.
அந்நியன், ரெமோ, அம்பி
ஆரம்பத்தில் அது நம்மை கட்டுப்படுத்துவது போல தெரியாது; மிகவும் அன்பாகவும் அக்கறையாகவும் இருப்பது போலத்தான் இருக்கும். ஆனால், காலப்போக்கில் சின்னச் சின்ன விஷயங்கள் மூலமாக நம்மீது ஆதிக்கம் செலுத்தத் தொடங்குவார்கள். இப்படித்தான் அவர் சொல்லச் சொல்ல, எனக்கே தெரியாமல் என்னுடைய சுய விருப்பங்கள் மாறத் தொடங்கின.
எளிமையாக சொல்ல வேண்டுமென்றால், ஒருநாள் எனது காதலர் ரெமோவாக இருப்பார். அப்போது இப்படியான காதலரா என்று எனக்கே நினைக்க தோன்றும். அந்தளவிற்கு அன்பை பொழிவார். அதுவே மறுநாள் அந்நியனாக மாறிவிடுவார், அதற்கு மறுநாள் குழந்தை போல் மன்னிப்பு கேட்டு கெஞ்சுவார். இது தான் தொடர்ந்து இரண்டு ஆண்டுகளாக மாறி மாறி சுழற்சி போல் நடந்து வந்தது.
நிச்சயதார்த்தம்
காதலிக்க ஆரம்பித்த சில மாதங்களிலேயே அவரின் குடும்பத்தினரிடம் என்னை அறிமுகப்படுத்தினார், அவரின் குடும்பத்தினர் என் வீட்டுக்கு வந்தனர். என் பெற்றோர் அவர்களின் வீட்டுக்கு சென்றனர். இப்படி மூன்று மாதங்களிலேயே நிச்சயதார்த்தம் எங்கு நடத்துவது, எத்தனை பேர் வர வேண்டும் என்ற பேச்சுகள் வந்தன. ஆனால், அந்த நிச்சயதார்த்தத்தை நான் பல முறை தள்ளிப்போட்டேன். இது சரியான நேரம் இல்லை, இன்னும் கொஞ்சம் நேரம் எடுத்துக்கொள்ளலாம், நீ உன் கேரியரில் கவனத்தை செலுத்து, நமக்கு இன்னும் வயது இருக்கிறது என்று தொடர்ந்து கூறினேன். பணத்திற்காக நான் அந்த உறவில் இருந்திருந்தால், நிச்சயதார்த்தத்தை ஒருபோதும் நிறுத்தியிருக்க மாட்டேன். இவ்வாறு அவர் கூறினார்.