அரிய வகை குரங்கு வைத்திருந்த விவகாரம் : விக்ரமிற்கு 3 நாள் கெடு
சென்னை : தென்கிழக்கு ஆசிய நாடுகளில் காணப்படும், அரிய வகை உயிரினமான 'லார் கிப்பன்' வகை குரங்குடன், நடிகர் விக்ரம் சமீபத்தில் 'வீடியோ' வெளியிட்டார். இதுதொடர்பான விவரங்களை 3 நாட்களுக்குள் சமர்பிக்கும்படி விக்ரமிற்கு வனத்துறை கெடு விதித்துள்ளது.
நடிகர் விக்ரம் சமீபத்தில் அரிய வகை விலங்கான 'லார் கிப்பன்' குரங்கு உடன் விளையாடும் வீடியோவை வெளியிட்டு இருந்தார். இதற்கு எதிர்ப்பு கிளம்ப அந்த வீடியோவை நீக்கினார். வீடுகளில் வளர்க்க தடை விதிக்கப்பட்டுள்ள இவ்வகை குரங்கை, இவர் எப்படி வளர்த்து வருகிறார் என, பலரும் கேள்வி எழுப்பினர். அதைத் தொடர்ந்து, வனத்துறையினர் விசாரணையை தொடங்கினர். அப்போது, நடிகர் விக்ரம், தன் சம்பந்தியான, தொழிலதிபர் சி.கே. ரங்கநாதனின் பண்ணை வீட்டில், அந்த குரங்குடன் வீடியோ பதிவிட்டது தெரிய வந்தது. அதைத் தொடர்ந்து, வனத்துறை அதிகாரிகள், நேற்று முன்தினம் ஈஞ்சம்பாக்கத்தில் உள்ள, ரங்கநாதன் வீட்டுக்கு சென்றனர். அங்கு லார் கிப்பன் வகை குரங்கு இல்லாமலிருப்பதை பார்த்தனர்.
இது குறித்து விசாரித்த போது, 'அந்த குரங்கை கொடுத்த, ஈரோடு மாவட்டம், பெருந்துறையை சேர்ந்த கேசவநாதன் என்பவரிடமே திருப்பி கொடுத்துவிட்டோம்' என தொழிலதிபர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, பெருந்துறையில் உள்ள கேசவநாதன் பண்ணை வீட்டிற்கு சென்று, வனத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அவர், மணிப்பூரை சேர்ந்த லைகுராம் என்பவரிடம் இருந்து, மூன்று குரங்குகளை, சில ஆண்டுகளுக்கு முன் வாங்கி உள்ளார். அதில், ஒன்று இறந்து விட்டது. தற்போது இரண்டு மட்டும் அங்கிருந்தன.
குரங்குகளை வைத்திருப்பதற்கான சான்றிதழ் எதுவும் அவரிடம் இல்லை. எனவே, அந்த குரங்குகளை பறிமுதல் செய்து, வண்டலுாரில் உள்ள மறுவாழ்வு மையத்துக்கு எடுத்துச் செல்ல, வனத்துறை அதிகாரிகள் திட்டமிட்டனர். ஆனால், உயர் அதிகாரிகள், அவர் வாங்கிய நபர் குறித்து விசாரிக்கும்படி கூறியதால், குரங்குகளை பறிமுதல் செய்யும் நடவடிக்கையை, வனத் துறையினர் தற்காலிகமாக நிறுத்தி வைத்து உள்ளனர். இவ்விவகாரத்தில் வனத்துறையினர், மிகவும் மெத்தனமாக செயல்படுவதாக, குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இது குறித்து, வனத்துறை உயரதிகாரி ஒருவர் கூறியதாவது: கேசவநாதனுக்கு குரங்குகளை விற்ற, மணிப்பூரை சேர்ந்த லைகுராம் என்பவரிடம், ஆவணங்கள் உள்ளதா என்று விசாரிக்க உள்ளோம். இவை, 2021க்கு முன் கொண்டு வரப் பட்டிருந்தால், ஒரு பிரமான பத்திரம் பெற்று, இப்பிரச்னையை முடித்துவிடலாம். ஏனெனில், 2021க்கு பின்னரே, புதிய விதிகள் அமலுக்கு வந்தன. இதற்காக மணிப்பூர் நபரிடம், விசாரணை மேற்கொள்ள இருக்கிறோம் என்றார்.
விக்ரமிற்கு 3 நாள் கெடு
இந்த விவகாரம் தொடர்பான விக்ரமிடம் வனத்துறை விசாரணையை துவங்க உள்ளது. இதுதொடர்பாக அவருக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளது. தான் வெளியிட்ட வீடியோவில் இருந்த அந்த 'லார் கிப்பன்' குரங்கு இப்போது எங்கே இருக்கிறது. எப்படி இது அவருக்கு கிடைத்தது உள்ளிட்ட பல்வேறு விவரங்களை 3 நாட்களுக்குள் சமர்பிக்கும்படி வனத்துறை கெடு விதித்துள்ளது.