ஹாய் ஹலோ வேண்டாம் ; கியாரா அத்வானிக்கு 'டாக்ஸிக்' இயக்குனர் போட்ட உத்தரவு
கன்னடத்தில் யஷ் நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற 'கேஜிஎப்' படத்தின் இரண்டு பாகங்களைத் தொடர்ந்து அவர் தற்போது நடித்து வரும் படம் 'டாக்ஸிக்'. பிரபல நடிகையும் இயக்குனருமான கீத்து மோகன்தாஸ் இப்படத்தை இயக்கியுள்ளார். ஒரே நேரத்தில் கன்னடம் மற்றும் ஆங்கிலத்தில் இது உருவாகியுள்ளது. விரைவில் இந்த படம் வெளியாகும் விதமாக வேலைகள் நடைபெற்று வருகின்றன. இந்த படத்தில் நயன்தாரா, கியாரா அத்வானி, ஹூமா குரேஷி, ருக்மணி வசந்த் என பல நடிகைகள் நடித்துள்ளனர். இதில் கதாநாயகிகளில் ஒருவராக நடித்துள்ள கியாரா அத்வானி, இந்த படப்பிடிப்பு தளத்தில் கண்ட வித்தியாசமான அனுபவங்களை சமீபத்திய பேட்டியில் கூறியுள்ளார்.
இது குறித்து அவர் கூறும்போது, நான் எப்போது படப்பிடிப்பு தளத்திற்கு வந்தாலும் அங்கு இருப்பவர்களிடம் ஹாய், ஹலோ, குட் மார்னிங் என சொல்வது வழக்கம். ஒரு நாள் கீத்து மோகன்தாஸ் என்னை அழைத்து, இதுபோன்ற ஹாய், ஹலோ எல்லாம் சொல்ல வேண்டாம். படப்பிடிப்பு தளத்திற்கு வந்ததுமே நேராக உங்கள் கதாபாத்திர மனநிலைக்கு சென்று விடுங்கள் என்று கூறிவிட்டார். கதாபாத்திரத்தின் உணர்ச்சி தீவிரம் குலையாமல் இருக்கவே அவர் இவ்வாறு சொன்னார் என்பது பின்னர் புரிந்துகொள்ள முடிந்தது” என்று கூறியுள்ளார்..