நான் நடந்தால், பேசினால் சாதனைதான்: சிம்பொனி நிகழ்ச்சியில் இளையராஜா
இசையமைப்பாளர் இளையராஜாவின் 'வேலியண்ட்' சிம்பொனி இசை நிகழ்ச்சி சென்னை நேரு வெளி விளையாட்டு அரங்கில் நேற்று இரவு நடந்தது. இதில் இளையராஜா தம்பி கங்கைஅமரன், மகன்கள் கார்த்திக்ராஜா, யுவன் சங்கர் ராஜா, இசையமைப்பாளர் தேவிஸ்ரீபிரசாத், இயக்குனர்கள் ஆர்.வி.உதயகுமார், கார்த்திக் சுப்பராஜ், மாரிசெல்வராஜ், நடிகர்கள் சந்தான பாரதி பல பாடகர், பாடகிகள் கலந்துகொண்டனர்.
தனது பேரன் இருவர் நடுவில் அமர்ந்து இசைநிகழ்ச்சியை ரசித்தார் இளையராஜா. முதலில் வெளிநாடுகளில் இருந்து வந்த இசைக்கலைஞர்கள் சிம்பொனி வாசித்தனர். பின்னர், இளையராஜாவின் சில பாடல்களையும் சிம்பொனி குழு வாசித்தது. நிகழ்ச்சியில் இளையராஜா 'புதிய வார்ப்புகள்' படத்தில் இடம் பெற்ற 'இதயம் போகுதே' பாடல் உருவானது பற்றியும் அதில் பயன்படுத்தப்பட்ட சிம்பொனி குறித்தும் விரிவாக பேசினார். பின்னர், அதை வாசித்து காண்பித்தார்.
அப்போது பேசுகையில் ''நம் இசையையும், சிம்பொனியையும் இணைத்தது பெரிய சாதனை. இசை உலக சரித்திரத்தில் இதுஒரு மிகப்பெரிய சாதனை. நான் சாதனைகளுக்காக, விருதுகளுக்காக காத்திருப்பவன் நான் அல்ல. நான் நடந்தால், நான் பேசினாலே சாதனை'' என்றார். நிகழ்ச்சியில் கார்த்திக்ராஜா, யுவன், கங்கை அமரன் அவரை வாழ்த்தி பேசினர்.
''நான் இந்த நிகழ்ச்சியை கேட்க நினைத்தேன். இப்போது என் படத்துக்கு இளையராஜா இசையமைப்பது மகிழ்ச்சி'' என கார்த்திக் சுப்பராஜ் பேசினார். வியன்னாவில் சிம்பொனியை கேட்டு இருக்கிறேன். சென்னையில் கேட்பது மகிழ்ச்சி என தேவி ஸ்ரீ பிரசாத் பேசினார். நான் பிறந்தது முதல் ராஜாவின் ரசிகன் என்று பார்த்திபன் பேசினார். இன்று மாலை சென்னை நேரு ஸ்டேடியத்தில் இளையராஜா இசை நிகழ்ச்சி நடக்கிறது. பாடகர்கள் ஹரிகரன் உள்ளிட்டோர் அதில் பாடுகிறார்கள்.