உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / ''சென்னை என் தாய்வீடு'': ராம்சரண் பேச்சு

''சென்னை என் தாய்வீடு'': ராம்சரண் பேச்சு


புச்சிபாபு இயக்கத்தில் ராம்சரண், சிவராஜ்குமார், ஜான்விகபூர் நடிக்கும் 'பெத்தி' படம், தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் ஜூன் 4ம் தேதி வெளியாகிறது. ரத்னவேலு ஒளிப்பதிவு செய்ய ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். சென்னையில் நடந்த நிகழ்ச்சியில் ராம்சரண் பேசியது:

உண்மையாகச் சொன்னால், சில நேரங்களில் என்ன பேச வேண்டும் என்று தெரியாமல் போய்விடும். இப்போதும் அந்த மாதிரியான ஒரு தருணத்தில்தான் நான் இருக்கிறேன். சென்னை வந்தாலே எனக்கு எப்போதும் இப்படியான உணர்வு ஏற்படும். சென்னை எனக்கு எப்போதும் ஒரு சிறப்பான இடம். நான் பிறந்து, வளர்ந்த நகரம் இது. என் அம்மாவும் இங்கேதான் பிறந்தார். இது எனக்கு தாய்வீடு மாதிரி.

'ஆர்.ஆர்.ஆர்., மகதீரா' அல்லது வேறு எந்தப் படமாக இருந்தாலும், சென்னைக்கு வந்து புரமோஷன் செய்யும் போது வீட்டிற்கு வந்த உணர்வே கிடைக்கிறது. பெத்தி படத்தை முடிக்க எங்களுக்கு சுமார் இரண்டரை ஆண்டுகள் ஆனது. அதில் 285 நாட்களுக்கும் மேலாக நாங்கள் உழைத்தோம். ஆனால் எங்களைவிட அதிகமாக உழைத்தவர் இயக்குநர் புச்சி பாபு. கடந்த ஐந்து அல்லது ஆறு ஆண்டுகளாக அவர் இந்தப் படத்திற்காக உழைத்திருக்கிறார்.

நாங்கள் கஷ்டப்பட்டோம் என்று சொல்லிக் கொண்டிருக்கிறோம். ஆனால் உண்மையில் இப்படிப்பட்ட சிறந்த கலைஞர்கள் ஒரு படத்தில் இருக்கும்போது அந்தப் பயணம் கஷ்டமாகத் தோன்றாது. இந்தக் கதையை எங்களிடம் கொண்டு வந்த புஷ்பா இயக்குனர் சுகுமார் சாருக்கு நான் நன்றி தெரிவிக்க விரும்புகிறேன்.

ஏ.ஆர். ரஹ்மான் இந்தப் படத்தின் மையத் தூண். நாங்கள் அனைவரும் ஒரு வீட்டைத் தாங்கும் தூண்கள் என்றால், அதன் நடுவில் இருக்கும் மிகப்பெரிய ஆதாரத் தூண் அவர் தான். கடந்த பத்து நாட்களுக்கும் மேலாக அதிகாலை வரை விழித்திருந்து பின்னணி இசைப் பணிகளில் ஈடுபட்டிருக்கிறார். அவரது அர்ப்பணிப்பு எங்களுக்கு எல்லாம் மிகப்பெரிய உத்வேகமாக இருக்கிறது.

பிரபல கன்னட நடிகர் சிவராஜ்குமார் திரையில் தோன்றினாலே ஒரு தீப்பொறி போல ஆற்றல் உருவாகும். ஜெயிலர் படத்தில் அவருடைய கதாபாத்திரத்தை நான் பலமுறை பார்த்திருக்கிறேன். காரில் பயணம் செய்யும்போதுகூட அந்த காட்சிகளை மீண்டும் மீண்டும் பார்ப்பேன். குறிப்பாக அவர் மெதுவாக நடந்து வரும் காட்சியும், பீடி பிடிக்கும் அந்த ஸ்டைலும் இன்று ஒரு ஐகானிக் தருணமாக மாறியுள்ளது. அவரது கண்களே ஆயிரம் வார்த்தைகள் பேசும். இந்த படத்தில் அவர் முக்கியமான வேடத்தில் வருகிறார்.

படத்தின் ஒளிப்பதிவாளர் ரத்னவேலு சார் பற்றி என்ன சொல்வது? அவருடன் நான் நான்கு திரைப்படங்களில் பணியாற்றியிருக்கிறேன். இரண்டு படங்களை நான் தயாரித்தபோதும் அவர் உடன் இருந்தார். அவர் ஒரு உண்மையான ஜாம்பவான். எந்திரன் படத்தில் அவர் உருவாக்கிய காட்சிகள், குறிப்பாக பிரம்மாண்ட பாடல் காட்சிகள், என்னை மிகவும் கவர்ந்தவை. 'அந்த மாதிரியான ஒரு காட்சியை எனக்கும் கொடுங்கள் சார்' என்று நான் எப்போதும் அவரிடம் கேட்பேன்.

ரஜினி சார், கமல் சார், ஷங்கர் சார் போன்ற மகத்தான கலைஞர்களுடன் பணியாற்றிய அனுபவம் அவருக்கு இருக்கிறது. ஆனால் அந்த அனுபவத்தின் பெருமையை அவர் ஒருபோதும் வெளிக்காட்ட மாட்டார். அதுவே அவரது சிறப்பு.

இந்தப் படத்தை நான் வெறும் ஒரு நடிகராக செய்யவில்லை. மனதார காதலித்து செய்தேன். ஒவ்வொரு நாள் படப்பிடிப்பு முடிந்து வீட்டிற்கு வந்ததும், என் நண்பர்களிடமும், அம்மாவிடமும், அந்த நாள் ஷூட்டிங் அனுபவங்களைப் பற்றியே தொடர்ந்து பேசிக்கொண்டிருப்பேன். 'போதும், நிறுத்து… நாள் முழுவதும் இதைப் பற்றியே பேசிக்கொண்டிருக்கிறாய்' என்று அவர்கள் சொல்லும் அளவுக்கு பெத்தி படம் என் மனதில் ஆழமாக பதிந்திருந்தது.

என் வீட்டில் எப்போதும் ஒரு விஷயம் சொல்வார்கள். 'ஒரு படத்தைப் பற்றி நீ வீட்டிற்கு வந்த பிறகும் தொடர்ந்து பேசினால், அந்த படம் கண்டிப்பாக பெரிய வெற்றி பெறும்' என்று. ஆர்.ஆர்.ஆர்., ரங்கஸ்தலம், மகதீரா போன்ற படங்களைப் பற்றியும் நான் அப்படித்தான் பேசினேன். நீண்ட நாட்களுக்குப் பிறகு மீண்டும் பெத்தி படத்தைப் பற்றியே வீட்டில் தொடர்ந்து பேசிக் கொண்டிருக்கிறேன். அதுவே இந்தப் படம் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமையும் என்பதற்கான என் நம்பிக்கை.

முதல்வர் விஜய் அவர்களுக்கு என் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். உச்சநிலையிலிருந்து ஒரு திரைப்பட வாழ்க்கையையும், மிகப் பெரிய நட்சத்திர அந்தஸ்தையும் விட்டு விட்டு பொதுச் சேவைக்காக வந்திருப்பது பாராட்டத்தக்க விஷயம். திரைப்படத் துறையைச் சேர்ந்த ஒருவராக நான் மிகவும் பெருமைப்படுகிறேன். அவருக்கும், தமிழக மக்களுக்கும் என் வாழ்த்துகள். இவ்வாறு அவர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !