ஓய்வு நேரத்தில் என்ன செய்வீர்கள்?: ஏ.ஆர்.ரஹ்மான் சொன்ன பதில்
ராம் சரண், ஜான்வி கபூர் நடிப்பில் புச்சி பாபு இயக்கத்தில் உருவான படம் தெலுங்கு படம் 'பெத்தி'. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருக்கிறார். தமிழிலும் இப்படம் ரிலீஸ் ஆவதால், சென்னையில் 'பெத்தி' படத்தின் புரமோஷன் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் ஏ.ஆர்.ரகுமான் பேசியதாவது:
கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு ராம் சரண் இந்த படம் விஷயமாக பேச எங்கள் வீட்டிற்கு வந்திருந்தார். அப்போது ஒரு விஷயம் எனக்கு மிகவும் தோன்றியது. ஒரு மிகப் பெரிய ஆலமரமான சிரஞ்சீவி சாரின் மகனாக இருந்து, அதே உயரத்தை எட்ட முடியுமா என்று பலர் கேள்வி எழுப்பியிருக்கலாம். ஆனால் ராம் சரண் அதையும் தாண்டி தன்னுடைய தனித்துவமான இடத்தை உருவாக்கியிருக்கிறார். அவர் இன்னொரு ஆலமரமாக வளர்ந்திருக்கிறார்.
அப்போது என் மகனும் அங்கே இருந்தான். நான் அவனிடம், 'நீ என்னைவிட பெரியவனாக வரலாம்' என்று சொன்னேன். அதற்கான உதாரணமாக ராம் சரணைச் சுட்டிக்காட்டினேன். இளம் தலைமுறைக்கு இப்படிப்பட்ட உதாரணங்கள் மிகவும் முக்கியம். இந்த படம் கமிட்டாகும் நேரத்தில் நான் பரிசோதனை முயற்சிகள் நிறைந்த படங்களிலும், வித்தியாசமான படைப்புகளிலும் அதிக கவனம் செலுத்தி வந்தேன். ஆனால் பெத்தி போன்ற ஒரு திரைப்படம் வந்தபோது அதில் இருக்கும் ஆற்றலும், அர்ப்பணிப்பும் என்னை ஈர்த்தது.
இந்த மாதிரியான பெரிய வர்த்தகப் படங்களில் நடிகர்கள் தங்கள் உயிரையே கொடுத்து உழைக்கிறார்கள். நடிப்பிலும், நடனத்திலும், ஒவ்வொரு காட்சியிலும் மிகப்பெரிய அர்ப்பணிப்பு இருக்கிறது. மேலும் இப்படங்கள் பல மொழிகளில் வெளியாகி உலகம் முழுவதும் சென்று சேர்கின்றன. அதனால் அனைவரின் உழைப்பும் மிகப் பெரிய அளவில் மக்களை சென்றடைகிறது.
ராம் சரண் இந்தப் படத்தின் ஒவ்வொரு காட்சியிலும் முழுமையான அர்ப்பணிப்புடன் செயல்பட்டிருக்கிறார். ஒவ்வொரு பிரேமிலும் அவரது உழைப்பு தெரியும். இசையும் காலத்திற்கு ஏற்ப தொடர்ந்து மாறிக்கொண்டே இருக்கிறது. ரோஜா காலத்திலிருந்து இன்று வரை இசை மற்றும் திரைப்படத் துறையில் ஏற்பட்ட மாற்றங்களை நான் நேரில் பார்த்திருக்கிறேன். பலர் என்னிடம் இருந்து ஊக்கமடைந்திருக்கலாம். ஆனால் நானும் பலரிடமிருந்து ஊக்கமடைந்திருக்கிறேன்.
தெலுங்குத் திரைப்படத் துறையில் கீரவாணி, தேவி ஸ்ரீபிரசாத், தமன் போன்ற திறமையான இசையமைப்பாளர்கள் இருக்கிறார்கள். தெலுங்கு சினிமா கடந்த சில ஆண்டுகளில் மிகப்பெரிய வளர்ச்சியை அடைந்துள்ளது. அவர்கள் மிகவும் லட்சியத்துடன் செயல்படுகிறார்கள். திரைப்படத் தயாரிப்பின் தரத்தையும் தொடர்ந்து உயர்த்தி வருகிறார்கள். அந்தத் துறையின் ஒரு பகுதியாக இருப்பதில் எனக்கு பெருமை. பெத்தி படத்தில் பணியாற்றிய அனுபவம் எனக்கு முதல் படம் செய்வது போன்ற புதிய உற்சாகத்தை அளித்தது.
இன்றுக் காலைதான் இந்தப் படத்தின் பின்னணி இசைப் பணிகளை முடித்தோம். முடிந்த பிறகும் 'இதை இன்னும் சிறப்பாக செய்ய முடியுமா?', 'இன்னும் ஏதாவது சேர்க்க வேண்டுமா?' என்ற ஆர்வம் எங்களுக்குள் இருந்தது. அந்த உற்சாகமே இந்தப் படத்தின் சிறப்பு. எனக்கு ஓய்வு நேரம் கொடுத்தால் பாட்டு கேட்கமாட்டேன். ஒரு படம் பார்ப்பேன். என் குழந்தைகளுடன் நேரம் செலவழிப்பேன். சென்னை புறநகரில் என் அம்மா நினைவிடம் இருக்கும் பண்ணை வீட்டுக்கு செல்வேன்'. இவ்வாறு ஏ.ஆர்.ரஹ்மான் கூறினார்.