உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / பிளாஷ்பேக்: வியாபார போட்டியில் வென்று, வியப்பில் ஆழ்த்திய ஏ வி மெய்யப்ப செட்டியார்

பிளாஷ்பேக்: வியாபார போட்டியில் வென்று, வியப்பில் ஆழ்த்திய ஏ வி மெய்யப்ப செட்டியார்


ஒரே கதையை வேறு வேறு திரைக்கலைஞர்களைக் கொண்டு, வெவ்வேறு காலகட்டங்களில் திரைப்படமாக எடுத்து, வெற்றி என்ற இலக்கை எளிதில் எட்டிப் பிடிக்கும் சாமர்த்தியம் அறிந்த நம் தமிழ் திரையுலகில், புகழ்மிக்க இந்து புராணக் காப்பியக் கதை ஒன்றை, ஒரு தயாரிப்பு நிறுவனம் நேரடி தமிழ் திரைப்படமாக எடுத்துக் கொண்டிருந்த வேளையில், அதே கதையை அடிப்படையாகக் கொண்ட ஒரு மாற்று மொழித் திரைப்படத்தை துரிதகதியில் தமிழாக்கம் செய்து, அந்த குறிப்பிட்ட நேரடி தமிழ் திரைப்படம் வெளிவரும் முன்பே, இந்த மொழிமாற்றம் செய்யப்பட்ட திரைப்படத்தை வெளியிட்டு, அதை வசூல் ரீதியாகவும் வெற்றி பெறச் செய்த ஒரு விவேகமிகு தயாரிப்பாளராக அன்று பார்க்கப்பட்டவர்தான் ஏ வி மெய்யப்ப செட்டியார்.

ரசிகர்களை கண்ணீர் விடச் செய்த “கண்ணகி” என்ற திரைப்படத்தைத் தந்த ஜோடியான பி யு சின்னப்பா ஹரிச்சந்தரனாகவும், பி கண்ணாம்பா சந்திரமதியாகவும் நடிக்க, பெரும் பொருட் செலவில் அப்போது உருவாகிக் கொண்டிருந்த தமிழ் திரைப்படம்தான் “ஹரிச்சந்திரா”. படத்தை தனது “ஸ்ரீ ராஜராஜேஸ்வரி பிக்சர்ஸ்” என்ற தயாரிப்புப் பதாகையின் கீழ் தயாரித்திருந்தவர் படத்தின் நாயகியான பி கண்ணாம்பா. படத்தை இயக்கியவர் கண்ணாம்பாவின் கணவரும் இயக்குநருமான கே நாகபூஷணம்.

படம் உருவாகிக் கொண்டிருந்த நேரம் இரண்டாம் உலகப்போர் நடந்து கொண்டிருந்த யுத்த காலம் என்பதால், சென்னையை விட்டு பலர் வெளியேறியிருந்தனர். ஏ வி மெய்யப்ப செட்டியாரின் “பிரகதி ஸ்டூடியோ”விலும் பலர் அவரவர் ஊர்களுக்குச் சென்றிருந்தனர். இருப்பினும் வசனகர்த்தா ஏ டி கிருஷ்ணசாமியும் இன்னும் சிலரும் பிரகதி ஸ்டூடியோவிற்குள்ளிருந்து பரபரப்பாக ஒரு வேளையைச் செய்து கொண்டிருந்தனர்.

ஏற்கனவே ஏ டி கிருஷ்ணசாமி மற்றும் கன்னட நடிகரும், இயக்குநருமான ஆர் நாகேந்திரராவ் ஆகியோரது இயக்கத்தில், ஏ வி மெய்யப்ப செட்டியார் அவர்களின் மேற்பார்வையில், 1943ம் ஆண்டு “பிரகதி ஸ்டூடியோ”வில் உருவாகி, கன்னடத்தில் வெளிவந்து பெரும் வெற்றி பெற்றிருந்த “ஹரிச்சந்திரா” திரைப்படத்தை துரிதகதியில் தமிழில் மொழிமாற்றம் செய்து கொண்டிருந்தனர் அங்கே. படத்திற்கான தமிழ் வசனங்களை ஏ டி கிருஷ்ணசாமி எழுதியிருந்தார். இவ்வாறு இரவு பகலாக பணிபுரிந்து, பி யு சின்னப்பா, பி கண்ணாம்பா நடிப்பில் உருவாகிக் கொண்டிருந்த நேரடி தமிழ் திரைப்படமான “ஹரிச்சந்திரா” வெளிவரும் முன்பே, இந்த கன்னட ஹரிச்சந்திராவை தமிழில் மொழி மாற்றம் செய்து திரைக்கு அனுப்பியிருந்தனர் ஏ வி எம் படக்குழுவினர்.

பி யு சின்னப்பா, பி கண்ணாம்பா நடித்த ஒரிஜினல் “ஹரிச்சந்திரா”வை விட, எம் வி சுப்பையா நாயுடு, லட்சுமிபாய், ஆர் நாகேந்திரராவ் ஆகியோர் நடித்து, தமிழில் மொழி மாற்றம் செய்யப்பட்டிருந்த இந்த “ஹரிச்சந்திரா” வசூலில் நல்ல வெற்றியைப் பெற்றது. வியாபாரப் போட்டியில் பெரும் வெற்றியைப் பெற்றுத் தந்ததோடு, பிற மொழியிலிருந்து தமிழில் மொழி மாற்றம் செய்யப்பட்ட முதல் திரைப்படம் என்ற பெருமையையும் ஏ வி மெய்யப்ப செட்டியாருக்கு பெற்றுத் தந்த ஒர் அரிய கலைப்படைப்புதான் இந்த “ஹரிச்சந்திரா”.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !