அந்த இரண்டு பேரை பாட வைப்பது கஷ்டம்: இசைநிகழ்ச்சியில் இளையராஜா சொன்ன தகவல்
சென்னை நேரு ஸ்டேடியத்தில் இளையராஜா சிம்போனி இசை நிகழ்வு மே 30ம் தேதி நடந்தது. இந்நிலையில், இளையராஜா இசைக்கச்சேரி நேற்று மாலை அதே இடத்தில் நடந்தது. இதில் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் கலந்துகொண்டு இசைநிகழ்ச்சியை கேட்டு, பார்த்து மகிழ்ந்தனர். வழக்கம்போல் 'ஜனநீ' பாடல் மூலமாக இசை நிகழ்ச்சியை இளையராஜா தொடங்கினார். இந்த நிகழ்ச்சியில் 'மடை திறந்து' பாடலை எஸ்பிபி சரணும், 'அன்னக்கிளி உன்னை தேடுதே' பாடலை பாடகி ஸ்வேதாவும், 'மேகம் கொட்டட்டும்' பாடலை கார்த்திக்கும், 'ராக்கம்மா கையை தட்டு' பாடலை ஹரிசரணும், 'ஆசை நுாறுவகை' பாடலை யுகேந்திரனும் பாடினர். இப்படியாக 30 பாடல்கள் பாடப்பட்டன.
முதல்வர் விஜய் தாயாரும் பாடகியுமான ஷோபா சந்திரசேகர் 'கண்ணன் ஒரு கை குழந்தை' பாடலை பாடினார். அப்போது பேசிய இளையராஜா ''ஷோபாவின் அப்பா நீலகண்டன் கச்சேரி குழு வைத்து இருந்தார். நாடகம் நடத்தினார். அதில் பணியாற்றி இருக்கிறேன். அப்போது ஷோபாவுக்கு 10 வயது இருக்கும்'' என்று பழைய நினைவுகளை குறிப்பிட்டு பேசினார். ஊரும்பேரும் பழனியப்பா பாடலை அங்கு பாடியது குறித்து பேசினார். ஷோபாவும் சுக்கிரதிசை உள்ளிட்ட நாடகங்களுக்கு இளையராஜா இசையமைத்ததை குறிப்பிட்டார். யுகேந்திரன் பாட வந்தபோது ''நான் பலருக்கும் பாடல் சொல்லிக்கொடுத்து இருக்கிறேன். அதில் யுகேந்திரன் அப்பா மலேசியா வாசுதேவன், ஜெயசந்திரன் ஆகியோருக்கு பாடல் சொல்லி கொடுப்பதுதான் கஷ்டம். யுகேந்திரன் பிறக்கும் முன்பே ரத்தபேய் என்ற நாடகம் நடத்த மலேசியாவில் இருந்து வாசுதேவன் வந்தார். அப்போதிலிருந்து பழக்கம்'' என்றார் இளையராஜா.
கவிஞர் கண்ணதாசன் குறித்தும் இளையராஜா பேசினார். 'பூஜைக்கு ஏத்த பூவிது, நேத்துதானே பூத்தது' என்று அவர் பாடல் எழுதினார். நேற்று பறித்த பூவை பூஜைக்கு பயன்படுத்தலாமா என்று கேட்டபோது இழுக்கு உடைய பாடல், இசையால் நிற்கும் என்று சொன்னார் என்றார். அந்த பாடலை மேடையில் கங்கை அமரன் பாடினார். வான் மேகங்களே பாடலை கண்ணதாசன் எழுதிய நினைவுகளையும் இளையராஜா பகிர்ந்துகொண்டார். காயாத கானகத்தே என்ற பழைய பாடலை பாட வைத்துவிட்டு, நாடக மேதை சங்கரதாஸ் சுவாமிகளின் திறமை, அவர் ஒரே நாளில் நாடகம், பாடல் எழுதும் விதத்தை பெருமையாக பேசிவிட்டு, இப்போது ஸ்பெஷல் நாடங்கள் இல்லை. அந்த கலை காணாமல் போய்விட்டது என்று இளையராஜா வருத்தப்பட்டார்.
'விடுதலை' படத்தில் இடம் பெற்ற வழிநெடுக காட்டுமல்லி பாடல் உருவான விதத்தை வெற்றிமாறன் விவரித்தார். இந்த நிகழ்ச்சியில் யுவன் இசையமைக்க, இளையராஜா உறவினர் நடிக்கும் 'ராஜா பிளேலிஸ்ட்' என்ற படத்தின் டிரைலர் வெளியிடப்பட்டது. இந்த படத்துக்கும், இளையராஜா பாடல்களுக்கும் தொடர்பு உண்டு. அதனால், இந்த மேடையில் டிரைலர் வெளியிடப்பட்டது என்று யுவன் விளக்கம் சொன்னார். இளையராஜா இசையமைக்கும் 1540வது படம் குறித்தும், அதை தான் இயக்குவது குறித்தும் கார்த்திக்சுப்பராஜ் பேசினார். அலையோசை படத்தில் வரும் போராடடா வாளேந்தடா பாடல் குறித்தும், அதனால், தனது படக்கதைகள் உருவானது குறித்தும் பேசிவிட்டு, அவர் இசையில் உருவாகும் தனது 'மஞ்சணத்தி' படம் குறித்தும் மாரிசெல்வராஜ் பேசினார். விழாவில் நடிகர்கள் பார்த்திபன், நாசர், நடிகை ராதிகா உட்பட பலர் கலந்துகொண்டனர். நாளை பெங்களூருவில் இளையராஜா இசை நிகழ்ச்சி நடக்கிறது.