பிளாஷ்பேக்: இயக்குநர் ஏ எஸ் ஏ சாமிக்கு வண்ணத்திரை வாய்ப்பை வழங்கிய வானொலி நாடகம்
1944ம் ஆண்டு ஆகஸ்ட் 29 அன்று, திருச்சி வானொலி நிலையம் ஒரு நாடகத்தை ஒலிபரப்பியது. கலையுலகின் அன்றைய உச்ச நட்சத்திரமான எம் கே தியாகராஜ பாகவதர் அந்த ரேடியோ நாடகத்தில் முதன் முதலாக நடிக்கப் போவதாக விளம்பரப்படுத்தப்பட்டு, நாடகத்தை பலர் ஆவலோடு கேட்டு மகிழ்ந்தனர். அவ்வாறு கேட்டு மகிழ்ந்தவர்களில் டி கே சண்முகம் சகோதரர்களும் உண்டு. டி கே சண்முகம் சகோதரர்களுக்கு நாடகம் பிடித்துப் போக, அதை மேடை நாடகமாக அரங்கேற்ற விரும்பி, வானொலி நிலையத்தோடு தொடர்பு கொண்டு, “பில்ஹணன்” என்ற அந்த நாடகத்தை எழுதிய ஏ எஸ் ஏ சாமிக்கு கடிதம் எழுதினர்.
திருநெல்வேலி மாவட்டத்தை பூர்வீகமாகக் கொண்டு, இலங்கையை வசிப்பிடமாகக் கொண்டிருந்த ஏ எஸ் ஏ சாமி, அங்கேயே “பில்ஹணன்” நாடகத்தை அரங்கேற்ற முயற்சித்து, அது முடியாமல் போக, திருச்சி வானொலி நிலையத்திற்கு அனுப்பி நாடகம் ஒலிபரப்பாகியது. இதற்கிடையே டி கே சண்முகம் சகோதரர்கள் கடிதம் கண்டு, அவர்கள் முகாமிட்டு நாடகங்கள் நடத்தி வந்த ஈரோட்டிற்கு வந்து அவர்களை சந்தித்தார் ஏ எஸ் ஏ சாமி. பாரதிதாசனின் “பில்ஹணீயம்” காவியத்தின் இறுதிப் பகுதிகளை இணைத்து, ஒரு முழுநீள நாடகமாக அந்த வானொலி நாடகத்தை எழுதித் தருமாறு ஏ எஸ் ஏ சாமியிடம் டி கே சண்முகம் சகோதரர்கள் கேட்டுக் கொள்ள, ஏ எஸ் ஏ சாமியும் அதற்கு சம்மதம் தெரிவித்திருந்தார். நாடகத்தின் நகைச்சுவைக் காட்சிகளை டி கே முத்துச்சாமியும், பாடல்களை மதுர பாஸ்கரதாஸ{ம் எழுதியிருந்தனர். பில்ஹணனாக டி கே சண்முகமும், யாமினியாக எம் எஸ் திரவுபதியும் நடிக்க நாடகம் அமோகமாக அரங்கேறியது.
ஏ எஸ் ஏ சாமியின் வசன சிறப்புகளைப் பாராட்டி, நாடகத்தை வந்து பார்க்குமாறு “ஜுபிடர் பிக்சர்ஸ்” அதிபர் சோமுவிற்கு டி கே சண்முகம் சகோதரர்கள் அழைப்பு விடுக்க, அவரும் கோயம்புத்தூரிலிருந்து ஈரோட்டிற்கு வந்து நாடகத்தைப் பார்த்துச் சென்றார். அவர் பார்த்துச் சென்றதோடு நில்லாமல், தான் அடுத்து தயாரிக்க இருந்த ஆறு திரைப்படங்களுக்கு வசனம் எழுதும் வாய்ப்பினை வழங்கி, ஏ எஸ் ஏ சாமியை ஒப்பந்தமும் செய்து கொண்டார். இதனைத் தொடர்ந்து தான் நடிக்க இருந்த “உதயணன் வாசவதத்தா” என்ற திரைப்படத்திற்கும் வசனம் எழுதும் வாய்ப்பினை எம் கே தியாகராஜ பாகவதரும் ஏ எஸ் ஏ சாமிக்கு பெற்றுத் தந்தார். “உமா பிக்சர்ஸ்” என்ற பதாகையின் கீழ், ஆர் எம் ராமனாதன் தயாரித்திருந்த இத்திரைப்படத்தில், உதயணனாக எம் கே தியாகராஜ பாகவதர் சில காட்சிகள் நடித்திருந்ததோடு, ஒரு சில பாடல்களையும் பாடியிருந்த நிலையில், அவர் சிறை செல்லும் நிலைக்குத் தள்ளப்பட, அதுவரை அவரை வைத்து எடுக்கப்பட்டிருந்த காட்சிகளும், பாடல்களும் கைவிடப்பட்டு, பின்னர் ஜி என் பாலசுப்ரமணியத்தை அந்தக் கதாபாத்திரத்தில் நடிக்க வைத்து பாடமாக்கியிருந்தனர் படக்குழுவினர்.
இயக்குநர் டி ஆர் ரகுநாத் இயக்கத்தில் 1947ம் ஆண்டு வெளிவந்த “உதயணன் வாசவதத்தா” திரைப்படத்தின் உரையாடல்களை அற்புதமாக எழுதி வெள்ளித்திரையின் வெளிச்சம் கிடைக்கப் பெற்று, ஒரு வசனகர்த்தாவாகவும், பின்னர் இயக்குநருமாக வெள்ளித்திரையை அலங்கரித்தவர்தான் இயக்குநர் ஏ எஸ் ஏ சாமி.