பிறந்தநாளில் குவிந்த ரசிகர்கள் : வாழ்த்து மழையில் இளையராஜா
‛ராக தேவன், இசைஞானி' என ரசிகர்களால் கொண்டாடப்படுபவர் இசையமைப்பாளர் இளையராஜா. ஹிந்தி பாடல்களை நோக்கி சென்ற தமிழர்களை, தன் இசையால் மீட்டெடுத்தவர். ‛அன்னக்கிளி' படம் வாயிலாக அறிமுகமாகி 1500க்கும் அதிகமான படங்களில் இப்போதும் பிஸியான இசையமைப்பாளராக வலம் வருகிறார். கிராமிய இசை, மேற்கத்திய கிளாசிக், கர்நாடக இசை, இந்துஸ்தானி இசை.... என அனைத்து விதமான இசைகளையும் சினிமா பாடல்களில் பயன்படுத்தி, வெற்றி கண்டவர். மேலும் லண்டனில் சிம்பொனி அரங்கேற்றி சாதனை படைத்தவர்
தேனி மாவட்டம் பண்ணைப்புரத்தில், ராமசாமி - சின்னத்தாயம்மாள் தம்பதிக்கு மகனாக 1943 ஜூன் 2ல் பிறந்த டேனியல் ராசைய்யா (எ) ஞானதேசிகன் இன்று ராஜாவாக இளையராஜாவாக தனது 83வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். பொதுவாக அவரது பிறந்தநாளில் ரசிகர்கள் பார்க்க திரளுவர். இந்தாண்டு அவரது பிறந்தநாளை முன்னிட்டு அதிகாலை 5 மணி முதல் சென்னை தி நகர் ஸ்டூடியோவில் வாழ்த்து சொல்ல ரசிகர்கள் குவிந்தனர். அவர்களுடன் போட்டோ எடுத்து வாழ்த்துக்களை ஏற்றுக் கொண்டார் இளையராஜா.
இன்று மாலை பெங்களூரில் சிம்பொனி இசை நிகழ்ச்சி நடக்கிறது. அங்கு செல்ல தயாராகிக் கொண்டிருக்கிறேன், ஆனாலும் உங்க அன்பு வாழ்த்துக்களை ஏற்றுக் கொள்கிறேன் எல்லோரும் அமைதியாக போட்டோ எடுத்துக் கொள்ளுங்கள் என ரசிகர்களுக்கு இளையராஜா வேண்டுகோள் வைத்தார். மேலும் பிறந்த நாளில் என்னை வாழ்த்துகிறார்கள் நான் அவர்களை வாழ்த்துகிறேன் அவர்கள் அன்புக்கு நன்றி என தெரிவித்தார்.
முக்கிய பிரபலங்கள் வாழ்த்து
முதல்வர் விஜய்
இசைஞானி இளையராஜாவிற்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள். தேனி மாவட்டம், பண்ணைப்புரம் என்ற கிராமத்தில் பிறந்து, தனது சகோதரர்களுடன் இசைப் பயணத்தைத் தொடங்கி, “அன்னக்கிளி” என்ற திரைப்படத்தின் மூலமாக திரைத்துறையில் கால்பதித்து, உலகப் புகழ்வாய்ந்த சிம்பொனி இசை வரை பல சாதனைகளைப் படைத்து, இசை உலகின் மகுடமாகத் திகழ்ந்து வரும் இளையராஜா தமிழ்நாட்டிற்குப் பெருமை சேர்த்து வருகிறார். உங்கள் இசை இன்னும் பல தலைமுறைகளுக்கு வழிகாட்டும் ஒளியாகவும், ஊக்கமாகவும் தொடர்ந்து ஒலிக்கட்டும். தமிழர்களின் பெருமையாக விளங்கும் தங்களுக்கு எங்களின் அன்பும், மரியாதையும் கலந்த இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்!
கமல்
உங்க இசை உங்க வயசைப் போல பல நூறு மடங்கு வாழும். நீங்களும் எங்கள் பேராசைகளையெல்லாம் கடந்த ஆயுளைப் பெற்று வாழ வேண்டும், இசையோடு. உங்கள் கமல்
திமுக., தலைவர் ஸ்டாலின்
இசையால் நம்மை என்றென்றும் ஆளும் இசைஞானிக்குப் பிறந்தநாள் வாழ்த்துகள். தலைவர் கலைஞர் மீது கொண்ட மதிப்பின் காரணமாக தனது பிறந்தநாளையே ஒரு நாள் முன்னதாக மாற்றிக் கொண்டவர். 'இசைஞானி' என்று தலைவர் கலைஞர் பட்டம் சூட்டினார். அன்னக்கிளியில் தொடங்கி சிம்பொனி வரையிலான ராஜாவின் ராஜாங்கம் தொடரட்டும். ராஜா என்றும் ராஜாதான்!
அண்ணாமலை
இசையால் நம்மையெல்லாம் ஆட்கொண்டிருக்கும் கலைத்தாயின் தவப்புதல்வர், இசைஞானி இளையராஜாவிற்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன். ஐம்பது ஆண்டுகளாக, வயது, இனம், மொழி, நாடு என எல்லைகள் கடந்து பல நூற்றாண்டுகள் நிலைத்திருக்கும் நல்லிசையை வழங்கி, பல கோடி மனங்களின் அனைத்து உணர்வுகளுக்கும் அருமருந்தாக விளங்கும் எங்கள் ராஜாதிராஜன் இளையராஜா நூறாண்டுகளுக்கும் மேல் நலமுடன் வாழ இறைவனை வேண்டிக் கொள்கிறேன்.
இளையராஜா நன்றி
இளையராஜா வெளியிட்ட நன்றி வீடியோவில், ‛‛பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் என் நன்றி. முக்கியமாக முன்னாள் முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தார். அவருக்கும் நன்றி. என் மீது அன்பும், பாசமும் வைத்து நாடு முழுவதிலும் இருந்தும், பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் வந்து நேரில் வாழ்த்திய அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் மீண்டும் மீண்டும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்'' என்றார்.