பிரபல மலையாள நடிகர் சலீம் குமார் மறைவு
மலையாளத் திரையுலகில் காமெடி மற்றும் குணச்சித்ர நடிகராக வலம் வந்த சலீம் குமார், உடல் நலக்குறைவு காரணமாக நேற்று (சனிக்கிழமை) இரவு காலமானார். சமீபத்தில் ஏற்பட்ட உடல்நலக்குறைவு காரணமாக கொச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவர் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி மாரடைப்பு ஏற்பட்டு அவரது உயிர் பிரிந்தது. இவருக்கு வயது 56.
இன்று (ஞாயிறு) காலை 7:00 மணி முதல் சலீம் குமாரின் சொந்த ஊரான பரவூர் டவுன் ஹாலில் பொதுமக்கள் அஞ்சலிக்காக அவரது உடல் வைக்கப்பட்டுள்ளது. இவருக்கு சுனிதா என்கிற மனைவியும் சந்து குமார் மற்றும் ஆரோமல் குமார் என்கிற இரண்டு மகன்களும் உள்ளனர்.
மிமிக்ரி கலைஞராக தனது பயணத்தைத் தொடங்கிய சலீம் குமார், 1996ல் வெளியான 'இஷ்டமானு நூறு வட்டம்' என்கிற படத்தின் மூலம் அறிமுகமாகி ரசிகர்களிடம் ஓரளவு பிரபலமாகத் துவங்கினார். கிட்டத்தட்ட 30 வருடங்களாக 250க்கும் மேற்பட்ட படங்களில் நகைச்சுவை மற்றும் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்துள்ளார் சலீம் குமார்.
காமெடியில் தனக்கென ஒரு தனி பாணி மற்றும் வசன மொழியைக் கொண்டிருந்த சலீம் குமார், 'தென்காசிப்பட்டணம், ராஜமாணிக்கம்' உள்ளிட்ட பல படங்களில் தனது நகைச்சுவை நடிப்பால் ரசிகர்களை ஆச்சரியப்படுத்தினார். தமிழில் 'நெடுஞ்சாலை', 'மரியான்' ஆகிய படங்களில் நடித்திருக்கிறார்.
கடந்த 2010ல் வெளியான 'ஆதாமின்டே மகன் அபூ' என்கிற படத்தில் கதையின் நாயகனாக நடித்திருந்த சலீம் குமார், இதற்காகச் சிறந்த நடிகருக்கான தேசிய விருது மற்றும் கேரள அரசு விருதுகளையும் வென்றார். 2017ல் 'கருத்த யூதன்' மற்றும் 2018ல் 'தெய்வமே கைதொழாம் கே. குமார் ஆகணம்' என்கிற இரண்டு படங்களையும் இவர் இயக்கியுள்ளார்.
56 வயதான சலீம் குமார், நீண்ட காலமாக கல்லீரல் பாதிப்பு, சிறுநீரகக் கோளாறு மற்றும் நுரையீரல் பாதிப்பு ஆகியவற்றால் அவதிப்பட்டு வந்தார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அவருக்குக் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சையும் செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
இவரது மறைவுக்குக் கேரள முதல்வர் வி.டி.சதீஷன் மற்றும் திரையுலகைச் சேர்ந்த பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு சலீம் குமாரின் சொந்த ஊரான பரவூரில், கேரளாவின் புதிய முதல்வராக பொறுப்பேற்ற வி.டி.சதீஷனுக்குப் பாராட்டு விழா நடத்தினார்கள். அந்த நிகழ்வில் கலந்துகொண்டதுதான் சலீம் குமாரின் கடைசி பொது நிகழ்ச்சியாக அமைந்தது.