உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / ஒரே இயக்குனர்... ரூ.400 சம்பளம் டூ ஹீரோ: விஜய் சேதுபதி நெகிழ்ச்சி

ஒரே இயக்குனர்... ரூ.400 சம்பளம் டூ ஹீரோ: விஜய் சேதுபதி நெகிழ்ச்சி


பூரி ஜெகன்நாத் இயக்கத்தில் விஜய்சேதுபதி நடித்த 'ஸ்லம் டாக் 33 டெம்பிள் ரோட்' படத்தின் டீசர் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. இதில் சம்யுக்தா ஹீரோயின். பிரபல கன்னட நடிகர் துனியா விஜய் முக்கிய வேடத்தில் வருகிறார். சிம்பு ஜோடியாக 'காதல் அழிவதில்லை' படத்தை நடித்த சார்மி படத்தை தயாரித்துள்ளார்.

சென்னையில் நடந்த நிகழ்ச்சியில் விஜய்சேதுபதி பேசுகையில் பிரபல கன்னட நடிகர் துனியா விஜய் இதில் வில்லனாக நடித்திருக்கிறார். அவரை நான் நீண்ட காலமாக கவனித்து வருகிறேன். கன்னடத்தில் அவர் ஒரு மிகப்பெரிய நட்சத்திரம். ஆனால் படப்பிடிப்பு தளத்தில் பார்த்தபோது, மிகவும் ஒழுக்கமான, அர்ப்பணிப்பான நடிகராக இருந்தார். இயக்குனர் சொல்வதை முழுமையாகக் கேட்டு, அந்த கதாபாத்திரத்திற்காக தன்னை முழுமையாக தயார் செய்து கொள்வார். அவர் ஒரு சிறந்த மனிதர், அற்புதமான நடிகர். அவருடன் பணியாற்றியது எனக்கு பெருமையாக இருக்கிறது.

விடிவி கணேசுக்கு என் நன்றிகள். அவரைப் பற்றி எனக்கு இருந்த எண்ணம் வேறு, ஆனால் அவருடன் இணைந்து நடித்த பிறகு அவருடைய நடிப்பு திறமையை இன்னும் நெருக்கமாக புரிந்து கொள்ள முடிந்தது. ஒரு காட்சியை எப்படி இன்னும் சிறப்பாக மாற்றலாம் என்பதில் எப்போதும் ஆர்வமாக இருப்பார். படப்பிடிப்பு தளத்திலும், திரையிலும் அனைவரையும் மகிழ்விக்கக் கூடிய ஒரு அற்புதமான கலைஞர். அவர் இருக்கும் இடத்தில் எப்போதும் உற்சாகம் இருக்கும்.

ஹீரோயின் சம்யுக்தாவுக்கு நன்றி. மிகவும் திறமையான மற்றும் புத்திசாலித்தனமான நடிகை. ஒரு கதாபாத்திரத்தை விரைவாகப் புரிந்து கொண்டு, அதை மிக இயல்பாக வெளிப்படுத்தும் திறமை அவருக்கு இருக்கிறது. படத்திற்காக அவர் எடுத்த முயற்சியும், அர்ப்பணிப்பும் பாராட்டத்தக்கது. படத்தின் தயாரிப்பாளர் சார்மி பற்றி நிறைய பேசலாம். படப்பிடிப்பு தளத்தில் எவ்வளவு பெரிய சவால்கள் இருந்தாலும், அதை மிகுந்த அமைதியுடனும் உறுதியுடனும் கையாண்டார். ஒரு தயாரிப்பாளராக மட்டுமல்லாமல், முழு படத்தின் மீது மிகுந்த அக்கறை கொண்டவராக செயல்பட்டார். இயக்குனருக்கு என்ன தேவை, அதை எப்படி சிறப்பாக செய்து முடிக்க வேண்டும் என்பதில் மட்டுமே அவர் கவனம் செலுத்துவார். அவருடைய மன உறுதியையும், அர்ப்பணிப்பையும் நான் மிகவும் மதிக்கிறேன்.

பூரி ஜெகன்நாத் ஒரு வரலாறு. அவருடைய சினிமா பயணமும், வாழ்க்கை அனுபவங்களும் மிகவும் ஊக்கமளிப்பவை. பல ஆண்டுகளாக தொடர்ந்து எழுதிக் கொண்டே இருக்கிறார். ஒரு கதையை முடித்தவுடன் அடுத்த கதையைப் பற்றி யோசிக்கத் தொடங்கிவிடுவார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு காலத்திலும் அவர் பல கதைகளை என்னிடம் பகிர்ந்திருக்கிறார். ஒவ்வொரு கதையும் தனித்துவமாகவும், சுவாரஸ்யமாகவும் இருந்தது.

ஒரு காட்சியை உருவாக்குவதிலும், அதை திரையில் வெளிப்படுத்துவதிலும் அவருக்கு இருக்கும் தெளிவு அபாரமானது. அவருக்கு என்ன வேண்டும், ஒரு பிரேமில் என்ன இருக்க வேண்டும், எந்த அளவுக்கு இருக்க வேண்டும் என்பதில் மிகுந்த தெளிவு இருக்கும். தெலுங்கில் அவர் இயக்கிய 'அம்மா நானா ஓ தமிழ் அம்மாயி' படம், தமிழில் ரவிமோகன் நடிக்க 'எம்.குமரன் சன் ஆப் மகாலட்சுமி' என்ற பெயரில் வந்தது. அதில் நான் துணை நடிகராக 400 ரூபாய் சம்பளத்துக்கு நடித்தேன். அதை அவரிடமே சொன்னேன்'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !