பாரதிராஜாவுக்கு திருப்பூர் தந்த 'முதல் மரியாதை'
தமிழ் சினிமாவை ஸ்டுடியோக்களில் இருந்து கிராமத்து மண் சாலைகளுக்கு அழைத்து வந்தவர் இயக்குநர் பாரதிராஜா. அவரது இயக்கத்தில் சிவாஜி, ராதா நடிப்பில் 1985-ல் வெளியான 'முதல் மரியாதை' காவியத்திற்கும், திருப்பூருக்குமான பிணைப்பு குறித்து, அகில இந்திய சிவாஜி ரசிகர் மன்ற செயற்குழு உறுப்பினர் சிவகுமார் பிரபு பகிர்ந்த நினைவலைகள்:
கடந்த 1994-ல் திருப்பூர் வந்திருந்த பாரதிராஜா, இப்படத்தின் படப்பிடிப்பிற்காகத் திருப்பூர் வழியே சென்ற நாட்களை நெகிழ்வோடு நினைவு கூர்ந்தார். அன்று துாய்மையாக ஓடிய நொய்யல் ஆறு, பிற்காலத்தில் மாசடைந்ததைக் கண்டு வேதனைப்பட்டார். படம் வெளியானபோது, திருப்பூர் ஜோதி தியேட்டரில் 100 நாட்கள் ஓடிச் சாதனை படைத்தது.
கடந்த 2023-ல், ரசிகர் மன்ற ஜெயகுமார் ஏற்பாட்டில் இப்படத்தை மறுவெளியீடு செய்ய அனுமதி கேட்டபோது, என் குழந்தை போன்ற படைப்பு என நெகிழ்ந்து அனுமதித்தார்.
'பொன்னியின் செல்வன்' வெளியான சமயத்திலும், திருப்பூரில் ரசிகர்களின் அசுர ஆதரவால் மறுவெளியீட்டிலும் 108 நாட்களுக்கு மேல் ஓடி இப்படம் சாதனை படைத்தது.
இதன் 108-வது நாள் வெற்றி விழாவில் பாரதிராஜாவால் வர இயலாததால், படத்தில் நடித்த தீபன், ரஞ்சனியைப் பங்கேற்கச் செய்தார். ஏழைகளுக்குப் புடவைகள், அன்னதானம் வழங்கப்பட்ட இவ்விழாவின் அன்பைக் கண்டு வியந்து, போன் மூலம் தன் நன்றியைத் தெரிவித்தார்.
பாரதிராஜாவின் பல படங்கள் மைசூரில் நடந்தாலும், பிரபு நடித்த 'பசுபொன்' படம், சிவாஜியின் உடல்நிலையைக் கருதி பொள்ளாச்சியிலேயே படமாக்கப்பட்டது.
திருப்பூரின் ராயபுரம் தமிழ்ச்செல்வன் பாரதிராஜாவுக்கு ரசிகர் மன்றம் நடத்தி வந்தார். திருப்பூரின் பல இலக்கிய விழாக்களிலும் பாரதிராஜா பங்கெடுத்துள்ளார். மண்ணின் மனிதர்களை நேசித்த அந்த இயக்குநருக்கு, திருப்பூரின் மண் எப்போதும் தனது 'முதல் மரியாதையை' தந்து கொண்டே இருக்கிறது.
பாரதிராஜா பட ஹீரோவாக: பல்லடம் 'வசீகரன்': திருப்பூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளுடன் பாரதிராஜாவிற்கு இருக்கும் தொடர்பு இதோடு நின்றுவிடவில்லை. அவரது இயக்கத்தில், 2004ல் வெளியான 'கண்களால் கைது செய்' என்ற சினிமாவில், பல்லடத்தை சேர்ந்த பசல் அகமது என்ற புதுமுகம் வசீகரன் என்ற பெயரில் கதாநாயகனாக அறிமுகமானார்.
திருப்பூரில் ராயபுரம் பகுதியைச் சேர்ந்த தமிழ்ச்செல்வன் என்பவர் பாரதிராஜாவுக்கு ரசிகர் மன்றத்தை தொடங்கி செயல்படுத்தி வந்தார். திருப்பூரில் நடந்த இலக்கிய விழாக்களிலும், பாரதிராஜா பங்கெடுத்துள்ளார்.