ஜி.வி.பிரகாஷிற்கு தங்க செயின் பரிசளித்த பாடகர் வேல்முருகன்
இசையமைப்பாளர், பாடகர், நடிகர் ஜி.வி.பிரகாஷ் சிலதினங்களுக்கு முன்பு தனது பிறந்தநாளை கொண்டினார். அவர் நடிக்கும், அவர் இசையமைக்கும் படக்குழுவினர் சிறப்பு போஸ்டர் வெளியிட்டு அவரை வாழ்த்தினர். பல்வேறு திரையுலக பிரமுகர்களும் அவருக்கு சோஷியல் மீடியாவில் வாழ்த்து சொன்னார்கள்.
இந்நிலையில் பாடகர் வேல்முருகன். '100 பிலிம்ஸ் ஜீ.வி சார் ' என்ற முத்திரை பொறிக்கப்பட்ட தங்கச் சங்கிலியை இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ்குமாருக்கு தனது அன்பின் அடையாளமாக அணிவித்து வாழ்த்தியுள்ளார்.
இது குறித்து வேல்முருகன் கூறுகையில், 'ஜி.வி.பிரகாஷ் என் வாழ்க்கையி்ல் முக்கியமானவர், நான் உயர, பல்வேறு நாடுகளுக்கு சென்று பாடும் வகையில் ஏகப்பட்ட ஹிட் பாடல்களை கொடுத்து இருக்கிறார். சமீபத்தில் அவர் தனது 100வது படத்தை நிறைவு செய்துள்ளார். அதனால், இந்த பரிசு' என்கிறார்.
ஜி.வி.பிரகாஷ் இசையில் வேல்முருகன் ஒத்த சொல்லால(ஆடுகளம்), போட்டது பத்தல (சகுனி), அடி கருப்பு நிறத்தழகி (கொம்பன்), கத்தரிப் பூவழகி (அசுரன்), சண்டாளி (ரெபல்), அழகா சதிகாரி உட்பட பல பாடல்களை பாடியிருக்கிறார்.