கருப்பு படத்தில் தன் காட்சி நீக்கம் : ஆர்யா அளித்த பதில்
மிஸ்டர் எக்ஸ் படத்திற்கு பிறகு ஆர்யா நடிப்பில் ஜூன் 25ம் தேதி வெளியாகும் படம் அனந்தன் காடு. இந்த படத்தின் மூலம் அவர் மலையாளத்தில் அறிமுகமாகிறார். இப்படம் தமிழ், மலையாளம் என இரண்டு மொழிகளில் வெளியாகிறது. இந்த படத்தின் செய்தியாளர் சந்திப்பில் கருப்பு படம் குறித்த ஒரு தகவலை வெளியிட்டுள்ளார் ஆர்யா.
அவர் கூறுகையில், கருப்பு படத்தில் ஒரு சிறப்பு தோற்றத்தில் நடிக்குமாறு அப்படத்தின் இயக்குனர் ஆர்.ஜே.பாலாஜி என்னிடத்தில் கேட்டார். நாங்கள் இருவரும் நல்ல நண்பர்கள் என்பதால் நான் உடனடியாக ஒப்புக் கொண்டேன். அந்த கதாபாத்திரம் எவ்வளவு பெரியது என்பது குறித்து எதுவும் நான் அவரிடத்தில் கேட்காமல் நடித்துக் கொடுத்தேன். பின்னர் நான் நடித்த காட்சிகள் எடிட்டிங்கின்போது நீக்கப்பட்டு விட்டதாக என்னிடம் அவர் தெரிவித்தார். என்றாலும் அதில் எனக்கு எந்த பிரச்சினையும் இல்லை. என் காட்சிகள் நீக்குவது படத்தை இன்னும் சிறப்பாக மாற்றும் என்றால் அதுவே படத்திற்கு முக்கியம் என்று நான் கூறினேன் என்று தெரிவித்திருக்கும் ஆர்யா, கருப்பு படத்தில் நான் நடித்த காட்சி தியேட்டரில் ஓடிடியில் வெளியாகவில்லை என்றாலும், யூடியூப்பில் அதை வெளியிடுவதற்கு வாய்ப்பு உள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.