உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / நேபாள ரவுடி கும்பலிடமிருந்து மதுபாலாவைக் காப்பாற்றிய மோகன்லால்

நேபாள ரவுடி கும்பலிடமிருந்து மதுபாலாவைக் காப்பாற்றிய மோகன்லால்


'ரோஜா' திரைப்படத்தின் மூலம் மிகப்பெரிய அளவில் பிரபலமான நடிகை மதுபாலா (இப்போது 'மது'), அதன்பிறகு தமிழில் 'ஜென்டில்மேன், பாஞ்சாலங்குறிச்சி' என வெகு சில படங்களில் மட்டுமே நடித்தார். இந்த நிலையில் தற்போது மீண்டும் நடிப்புக்குத் திரும்பியுள்ள மது, மலையாளம் மற்றும் தமிழில் உருவாகியுள்ள 'சின்ன சின்ன ஆசை' என்கிற படத்தில் நடித்துள்ளார். சமீபத்தில் வெளியான 'கருப்பு' திரைப்படத்தின் மூலம் தமிழில் பிரபலமான மலையாள நடிகர் இந்திரன்ஸ் இந்த படத்தில் கதையின் நாயகனாக நடித்துள்ளார். வரும் ஜூன் 19ம் தேதி இந்த படம் வெளியாக இருக்கிறது. இந்த படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியின் போது, நடிகை மதுபாலா, நேபாள ரவுடிகளிடமிருந்து மோகன்லால் தன்னைக் காப்பாற்றிய நிகழ்வை நினைவு கூர்ந்தார்.

கடந்த 1992ல் மலையாளத்தில் வெளியான 'யோதா' என்கிற படத்தில் மோகன்லாலுக்கு ஜோடியாக மது நடித்திருந்தார். பிரபல இயக்குனர் சந்தோஷ் சிவன் இந்த படத்தை இயக்கினார். இதன் படப்பிடிப்பு பெரும்பாலும் நேபாளத்தில் நடைபெற்றது. அப்போது ஒரு பாடல் காட்சி நேபாளத்தின் பரபரப்பான மார்க்கெட் பகுதியில் உள்ள கோவில் போன்ற உயரமான இடத்தில் நடந்து கொண்டிருந்தது. அங்கு மாலை 6 மணிக்கு மேல் மார்க்கெட்டில் வேலை பார்ப்பவர்கள் மது அருந்த வருவது வழக்கம். அப்போது எதிர்பாராமல் சில பேர் அனுமதி இன்றி தன்னை நோக்கி வருவதைப் பார்த்துப் பயந்து போனார் மது.

இந்த சமயத்தில் அந்த சூழ்நிலையைக் கவனித்த மோகன்லால் மற்றும் படத்தின் இயக்குனர் சந்தோஷ் சிவனின் உதவியாளர் விஜய் இருவரும் மதுபாலாவின் கைகளை ஆளுக்கு ஒரு பக்கமாகப் பிடித்துக் கொண்டு, அந்த உயரமான இடத்திலிருந்து கீழே உள்ள பகுதியில் குதிக்க வைத்து, மக்கள் கூட்டத்தில் அவரை நடக்கச் சென்று காரில் ஏற்றி காவல் நிலையத்திற்குப் பத்திரமாக அழைத்துச் சென்றனர். அதன்பிறகு அங்கிருந்த போலீசார் தலையிட்டு அந்த ரவுடிகளை அப்புறப்படுத்தி நிலைமையைச் சுமூகமாக்கினார்கள். அப்போது நடந்த நிகழ்வு, குறிப்பாக மோகன்லால் மற்றும் படக்குழுவினர் என் மீது காட்டிய அக்கறை என் வாழ்க்கையில் மறக்க முடியாதது என்று கூறியுள்ளார் மது(பாலா).


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !