யோகி பாபுவுடன் இணைந்த 3 நாயகிகள்
காவ்யா புரொடக்ஷன் மற்றும் எஸ்2 மூவீஸ் இணைந்து பி.மஞ்சுநாத் தயாரிக்கும் படம் 'லாலிபாப் ஸ்போர்ட்ஸ் அகாடமி'. யோகி பாபு நாயகனாக நடிக்கும் இந்த படத்தில் அவருடன் ரச்சிதா மகாலக்ஷ்மி, யாஷிகா ஆனந்த், அஸ்மிதா ஆகியோர் நடிக்கிறார்கள். இவர்களுடன் ரெடின் கிங்ஸ்லி, மதுவந்தி, மெல்வின், அமித் பார்கவ், உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். கே.ஆர்.செந்தில்நாதன் எழுதி இயக்குகிறார். அச்சு ராஜாமணி இசையமைக்க, ஷிஹாப் பட்டாம்பி ஒளிப்பதிவு செய்கிறார்.
படத்தில் நடிப்பது பற்றி அஸ்மிதா கூறும்போது“ இந்தப் படத்தின் ஒரு பகுதியாக இருப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். 'லாலிபாப் ஸ்போர்ட்ஸ் அகாடமி' என்ற தலைப்பே மிகவும் வித்தியாசமாகவும், அனைவரையும் கவரக்கூடியதாகவும் இருக்கிறது. இந்தப் படத்தில் நான் இதுவரை நடித்திராத ஒரு வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறேன்” என்றார்.
யாஷிகா ஆனந்த் கூறும்போது “டி.டி. நெக்ஸ்ட் லெவல்' படத்திற்குப் பிறகு, ஒரு நல்ல கதைக்காக காத்திருந்தேன். அப்போது இந்தக் கதை என்னிடம் வந்தது. இந்தப் படத்தின் ஒரு பகுதியாக இருப்பதில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்” என்றார்.
ரச்சிதா கூறும்போது “ஒரு திரைப்படத்தை உருவாக்குவது என்பது மிகவும் கடினமான பயணம். ஒரு கதையை உருவாக்கும் கட்டத்திலிருந்தே பல சவால்கள் தொடங்கிவிடுகின்றன. கதை இன்னும் சிறப்பாக அமைய வேண்டும் என்பதற்காக தொடர்ந்து பல மாற்றங்கள், விவாதங்கள் நடைபெறும். திரைப்படம் உருவாகும் பயணத்தில் பல சிரமங்களும், எதிர்பாராத சவால்களும் வந்தாலும், அவற்றையெல்லாம் கடந்து இந்தப் படம் எந்தத் தடையும் இல்லாமல் வெற்றிகரமாக நிறைவடைய வேண்டும் என்பதே என்னுடைய மனமார்ந்த விருப்பம்” என்றார்.