பிளாஷ்பேக்: பொன்னியின் செல்வன் ஒரிஜினல் இரண்டாம் பாகம் 'பார்த்திபன் கனவு'
கல்கி எழுதிய 'பொன்னியின் செல்வன்' சரித்திர நாவலை அதே பெயரில் இரண்டு பாக படமாக இயக்கினார் மணிரத்னம். இரண்டு பாகம் என்றாலும் கதை ஒன்றுதான். முதல் பாகத்தின் தொடர்ச்சிதான் இரண்டாம் பாகம். ஆனால் ஒரிஜினல் இரண்டாம் பாகம் என்றால் அது 1960ல் வெளிவந்த 'பார்த்திபன் கனவு'.
பொன்னியின் செல்வன் அருண்மொழி வர்மன் (ரவிமோகன் நடித்த கேரக்டர்) சிறப்பாக ஆட்சி நடத்தினார். அவரது மறைவிற்கு பிறகு அவரது மகன் பார்த்திபன் ஆட்சிக்கு வந்தார். இவரது ஆட்சியின் போது பல்லவர்கள் படையெடுப்பு ஏற்பட்டு போரில் பார்த்திபன் வீர மரணமடைகிறான். தனது நாட்டை மீண்டும் கைப்பற்றி சோழ சாம்ராஜ்யத்தை மீட்டெடுக்க வேண்டும் என்பது பார்த்திபனின் கனவு, அதனை அவரது மகன் விக்ரமன் எப்படி செய்து முடிக்கிறார் என்பது படத்தின் கதை.
கல்கி 1941 முதல் 1943 வரை கல்கி வார இதழில் தொடராக வந்து, பின்பு புத்தகமானது. 1960ல் திரைப்படமானது. யோகானந்த் படத்தை இயக்க, வி.கோவிந்தாஜன் படத்தை தயாரித்தார். அசோகன் பார்த்திபனாகவும், அவரது மகன் விக்கிரமனாக ஜெமினி கணேசனும், மாமல்லர் என்ற நரசிம்மவர்மனாக எஸ்.வி.ரங்காராவும், விக்ரமன் காதலித்து மணந்து கொள்ளும் நரசிம்மவர்மனின் மகள் குந்தவையாக வைஜெயந்திமாலாவும் நடித்தனர். கமலி என்ற சிறிய வேடத்தில் சரோஜாதேவியும் நடித்திருந்தார்.
தமிழ், தெலுங்கு, சிங்கள மொழிகளில் படத்தை வெளியிட்டனர். படம் சுமாரான வரவேற்பையே பெற்றது.