உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / வாய்ப்பு கொடுத்தவர் மீதே வழக்கு போட்ட சுதா கொங்கரா

வாய்ப்பு கொடுத்தவர் மீதே வழக்கு போட்ட சுதா கொங்கரா

'சூரரைப் போற்று' படம் மூலம் இயக்குனர் சுதா கொங்கரா தந்த வரவேற்பில் அடுத்து அவர் சொன்ன 'புறநானூறு' படத்தைத் தயாரித்து நடிக்க விருப்பமாக இருந்தார் சூர்யா. அதற்கான அறிவிப்பு 2023ம் ஆண்டு அக்டோபர் மாதம் வெளியானது.

ஆனால், 2024 மார்ச் மாதம் இப்படத்திற்கான அவகாசம் கூடுதலாகத் தேவைப்படுகிறது என்று தெரிவித்திருந்தார்கள். அதன்பின் அந்தப் படம் அப்படியே டிராப் ஆகிப் போனது. அந்தப் படத்தைத்தான் டான் பிக்சர்ஸ் நிறுவனத்திற்கு மாற்றி 'பராசக்தி' என தலைப்பு வைத்து ஆரம்பித்து இந்த வருடப் பொங்கலுக்கு வெளியிட்டார்கள்.

'சூரரைப் போற்று' மூலம் தனக்கு சிறந்த நடிகருக்கான தேசிய விருது பெற காரணமாக இருந்த சுதா கொங்கராவின் 'புறநானுறு' படத்தை எந்த காரணத்தாலோ ஆரம்பிக்காமலேயே விட்டுவிட்டார் சூர்யா.

அப்படிப்பட்ட படத்தை 'பராசக்தி'யாக ஆரம்பித்து சுதாவுக்கு வாய்ப்பு வழங்கியது டான் பிக்சர்ஸ். அப்படத்தின் பட்ஜெட் திட்டமிடப்பட்டதை விட அதிகமாக சுமார் 150 கோடி ஆனதாக சொல்கிறார்கள். இயக்குனர் சுதா கொங்கராவை நம்பி அவ்வளவு கோடிகளை முதலீடு செய்தது தயாரிப்பு நிறுவனம்.

ஆனால், தற்போது 8.39 கோடி சம்பள பாக்கிக்காக தயாரிப்பு நிறுவனம் மீது வழக்கு தொடர்ந்திருக்கிறார் சுதா. அதோடு, 'பராசக்தி' படத்தின் சாட்டிலைட் ஒளிபரப்புக்கும் இடைக்காலத் தடை வாங்கி இருக்கிறார். அந்நிறுவனத்தின் அடுத்த வெளியீடான 'இதயம் முரளி' படத்திற்கும் தடை கோரி இருக்கிறார்.

தயாரிப்பாளர்களிடம் படத்தின் பட்ஜெட்டைச் சொல்லும் இயக்குனர்கள் அந்த பட்ஜெட்டை மீறி தயாரிப்பாளர்களுக்கு செலவு இழுத்துவிடுவது வாடிக்கையான ஒன்று. அதற்கெல்லாம் எந்த ஒரு தயாரிப்பாளரும் இதுவரை நீதிமன்றத்தை நாடியதில்லை. இனி, அதையும் செய்ய வேண்டும் என இந்த விவகாரம் குறித்து கோலிவுட்டில் கிசுகிசுக்கிறார்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !