தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத படைப்பாளி செழியன்
பிரபல ஒளிப்பதிவாளர், இயக்குனர் செழியன் இன்று காலை காலமானார். பி.சி.ஸ்ரீராம் ஒளிப்பதிவாளர் உதவியாளராக பணியாற்றியவர் செழியன். சிவகங்கையை சேர்ந்த இவர் அடிப்படையில் பொறியியல் பட்டதாரி. இவர் பெற்றோர்கள் ஆசிரியர்கள். ஆனாலும், இவர் எழுத்தின் மீது ப்ரியம் கொண்டு புத்தகங்களை தேடி கண்டுபிடித்து படிக்க தொடங்கினார். இசை கற்றார்.
பின்னர், சினிமா, போட்டோகிராபியில் ஆர்வம் காண்பித்தார். இவரின் கறுப்பு, வெள்ளை புகைப்பட ஆல்பம் பார்த்துவிட்டு அப்போது இயக்குனராக இருந்த சீமான், பி.சி.ஸ்ரீராமிடம் சேர சொல்லியுள்ளார். ஆனால், 20 முறை பார்த்த பின்னரும் இவரை உதவியாளராக சேர்க்கவில்லை. ஒரு தடவை அதிக நேரம் காத்துகிடந்துவிட்டு, இதுதான் கடைசி என செழியன் நினைக்க, இனி நீ என் உதவியாளர் என பி.சி.ஸ்ரீராம் காரில் ஏற்றி சென்றுள்ளார்.
பல படங்களில் பிசி ஸ்ரீராமின் உதவியாளராக பணியாற்றினார். பாலாஜி சக்திவேலின் ‛கல்லுாரி', தாமிரா இயக்கத்தில் பாலசந்தர், பாரதிராஜா நடித்த ‛ரெட்டசுழி', சீமானின் ‛மகிழ்ச்சி', பாலா இயக்கிய ‛பரதேசி, தாரை தப்பட்டை', ராஜூமுருகனின் ‛ஜோக்கர்' படங்களிலும், விஜய்சேதுபதி ஹீரோவாக அறிமுகமான ‛தென்மேற்கு பருவக்காற்று, ராட்டினம்' படங்களிலும் ஒளிப்பதிவாளராக பணியாற்றினார்.
இவர் இயக்கிய டுலெட் படம் தேசிய விருது பெற்றது. அப்துல் கலாம், ஜெயகாந்தன் ஆகியோர் வாழ்க்கையை ஆவணப் படமாக்கினார். சென்னையில் ஒளிப்பதிவு, சினிமா பயிற்சி பள்ளி ஆரம்பித்து 34 சுயாதீன இயக்குனர்களை படம் பண்ண வைத்து சான்றிதழ் வழங்கினார். கடைசியாக ‛கொன்றால் பாவம்', அஜயன் பாலா இயக்கிய ‛மைலாஞ்சி' படங்களுக்கு ஒளிப்பதிவாளராக பணியாற்றினார்.
நட்புக்கு மரியாதை
வரலட்சுமி நடித்த ‛கொன்றால் பாவம்' படத்தில் இவர் ஒளிப்பதிவு பேசப்பட்டது. பல ஆண்டுகளுக்கு முன்பு அட்வான்ஸ் ஆக 1 ரூபாய் வாங்கியதால், நண்பன் அஜயன் பாலாவுக்காக மிக குறைந்த சம்பளத்தில் ‛மைலாஞ்சி' படத்தில் பணியாற்றினார். பல ஆண்டுகால நட்புக்காக நான்கில் ஒரு பங்கு கூட அந்த படத்தில் செழியன் சம்பளம் வாங்கவில்லை. அந்த பட மலைபிரதேச காட்சிகள், செழியன் ஒளிப்பதிவு விமர்சன ரீதியாக பாராட்டப்பட்டது.
பாலாஜி சக்திவேல் இயக்கிய ‛கல்லுாரி' ஒரு உண்மை சம்பவத்தை அடிப்படையாகக்கொண்ட கதை. அதில் கடைசியில் வரும் பேருந்து எரிப்பு காட்சியை செழியன் தத்ரூபமாக காண்பித்து இருப்பார். பாலாவின் ‛பரதேசி' படத்துக்கு லண்டன் திரைப்பட விழாவில் விருது பெற்றார். உலக சினிமா பற்றி இவர் எழுதிய கட்டுரைகள் பிரபலம். சினிமா குறித்து 3 புத்தகங்கள் எழுதியுள்ளார்.
டூ லெட் படத்திற்கு கிடைத்த பாராட்டு
ஒளிப்பதிவாளராக பணியாற்றிய செழியன் ‛டூ லெட்' படத்தின் மூலம் இயக்குனர் ஆனார். வாடகை வீட்டில் கஷ்டப்படும் ஒரு ஏழை குடும்பத்து கதையை அதில் அழுத்தமாக சொல்லியிருந்தார். அந்த படம் தேசிய விருது பெற்றது. 2017, 2018 இல் நடைபெற்ற பல்வேறு திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டது. 2017இல் கோல்கட்டா திரைப்பட விழாவில் சிறந்த படமாக தேர்வு செய்யப்பட்டது. இத்திரைப்படம் 21 பிப்ரவரி 2019ல் திரைக்கு வந்தது. ஆஸ்கர் விருது பெற்ற ஈரானிய இயக்குநர் அஸ்கர் பர்ஹாடி, இது முழுமையான திரைப்படம் என பாராட்டினார்.
இந்தியத் திரைப்படத் தயாரிப்பாளர் அடூர் கோபாலகிருஷ்ணன் இத்திரைப்படத்தை மிகவும் புத்திசாலித்தனமான, அழகிய திரைப்படம் என பாராட்டினார். இலங்கைத் திரைப்படத் தயாரிப்பாளர் பிரசன்ன வித்தனகே உண்மையான அக்கறையுடன் எடுக்கப்பட்ட ஒரு உண்மையான திரைப்படம் என்று பாராட்டினார். இந்த படத்தை மனைவி பிரேமா பெயரில் செழியனே தயாரித்து, இயக்கி, ஒளிப்பதிவு செய்தார், சந்தோஷ், ஷீலா நடித்தனர்.
மகன் இறப்பு தந்த சோகம்
இவருக்கு பிரமா என்ற மனைவியும், அதிதா என்ற மகளும் உள்ளனர். சில ஆண்டுகளுக்கு முன்பு இவர் மகன் ஒரு அரியவகை நோயால் காலமானார். அதுவே அவரை பெரிதும் பாதித்தது. இவருக்கு புற்றுநோய் பாதிப்பு இருந்ததாக கூறப்படுகிறது. சில தினங்களாக சென்னையில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த செழியன் இன்று காலை காலமானார்.