பிளாஷ்பேக்: அதிகம் அறியப்படாத சிவாஜி குடும்ப வாரிசு
சிவாஜியின் அன்னை இல்லத்தில் இருந்து பிரபு, ராம்குமார், துஷ்யந்த், விக்ரம்பிரபு என நிறைய வாரிசுகள் வந்தார்கள். அதிகம் அறியப்படாத வாரிசு ஒருவரும் இருக்கிறார். அவர் சிவாஜி மனோகர். சிவாஜிக்கு எல்லாமுமாக இருந்த அவரின் அண்ணன் தங்கவேலுவின் மகன்தான் மனோகர்.
'சிவாஜி புரொடக்ஷன்ஸ்' தயாரிப்புகளில் 'சாந்தி நாராயணசாமி - டி. மனோகர்' எனப் பெயர் இடம்பெறுமே, இதில் மனோகர்தான் இவர். மனோகர் தனது பட்டப்படிப்பை முடித்த உடனேயே சிவாஜி கணேசனுடன் இணைந்து செயல்படத் தொடங்கினார். படப்பிடிப்புத் தளம், அரசியல் கூட்டங்கள் என எங்கு சென்றாலும் சிவாஜியின் கையைப் பிடித்துக்கொண்டு செல்வதும், அவருக்குத் தேவையான வசதிகளைச் செய்து கொடுப்பதும் மனோகரின் முக்கியப் பணியாக இருந்தது.
அதன் பிறகு சிவாஜி புரொடக்ஷன் நிர்வாகத்தை கவனித்துக் கொண்டார். 1990ம் ஆண்டு ராம நாராயயணன் இயக்கிய 'சக்தி பராசத்தி' என்ற படத்தில் நாயகனாக நடித்தார். சீதா அவரது ஜோடியாக நடித்தார். திருப்பதி மூவீஸ் தயாரித்தது. சங்கர், கணேஷ் இசை அமைத்தனர்.
அதன்பிறகு 'ரத்ததானம், புதுபாடகன்' உள்ளிட்ட சில படங்களில் நடித்தவர், பின்னர் சின்னத்திரை நடிகராகி விட்டார், 'சித்தி 2, விண்ணைத்தாண்டி வருவாயா, வாணி ராணி, மின்னலே' உள்ளிட்ட பல தொடர்களில் நடித்தார்.