உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / ஆங்கிலோ-இந்திய மக்கள் முற்போக்கு சிந்தனை கொண்டவர்கள்: ரம்யா ரங்கநாதன்

ஆங்கிலோ-இந்திய மக்கள் முற்போக்கு சிந்தனை கொண்டவர்கள்: ரம்யா ரங்கநாதன்


'ஜமா' படத்தின் மூலம் கவனம் பெற்ற பாரி இளவழகன், இயக்கி நாயகனாக நடித்துள்ள படம் 'அன்பே டயானா'. அவருக்கு ஜோடியாக, 'நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்' படத்தில் நடித்த ரம்யா ரங்கநாதன் நடித்துள்ளார்.

சென்னையின் பெரம்பூர் பகுதியை பின்னணியாகக் கொண்டு உருவாகியுள்ள இந்த திரைப்படம், வெவ்வேறு கலாசாரப் பின்னணியைச் சேர்ந்த இருவரின் காதலை மையமாகக் கொண்ட கிராஸ்-கல்ச்சுரல் லவ் ஸ்டோரி ஆக உருவாகியுள்ளது.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகை ரோஜா, நீண்ட இடைவெளிக்குப் பிறகு முக்கியமான முழுநீள கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் சேத்தன், பரிதாபங்கள் கோபி, இஸ்மத் பானு, சுதர்சன் காந்தி, செல் முருகன் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். பரத் சங்கர் இசையமைத்துள்ள இப்படத்திற்கு, ஷெல்லி கேலிஸ்ட் ஒளிப்பதிவு செய்துள்ளார். வரும் ஜூலை 17ம் தேதி வெளிவருகிறது.

இந்த நிலையில் படத்தின் பாடல் வெளியீட்டு விழா நடந்தது. இதில் நாயகி ரம்யா ரங்கநாதன் பேசியதாவது: என்னுடைய திறமையை நம்பி, 'அன்பே டயானா' படத்தில் டயானா கதாபாத்திரத்தை எனக்கு இயக்குநர் கொடுத்தார். இந்தக் கதாபாத்திரம் என் திரைப்பயணத்தில் எப்போதும் மிகவும் சிறப்பான ஒன்றாக இருக்கும். 'குட் நைட்', 'லவ்வர்', 'டூரிஸ்ட் பேமிலி' போன்ற தரமான படங்களின் வரிசையில் இந்த படமும் இடம்பிடிக்கும். இதில் என்னை ஒரு பகுதியாக இணைத்தது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது.

ரோஜா மேடத்துடன் பணியாற்றியது எனக்கு மறக்க முடியாத அனுபவம். சிறு வயதிலிருந்தே அவருடைய ரசிகை நான். திரையில் மிகவும் கம்பீரமாகத் தோன்றினாலும், நேரில் மிகவும் அன்பான, இனிமையான மனிதர். அவருடன் நடித்த ஒவ்வொரு நாளும் எனக்கு ஒரு புதிய அனுபவமாக இருந்தது.

'அன்பே டயானா' எனக்கு ஒரு நடிகையாக நிறைய உணர்வுகளை வெளிப்படுத்தும் வாய்ப்பை கொடுத்த படம். டயானா கதாபாத்திரத்தில் என்னால் முடிந்த அளவுக்கு முழு அர்ப்பணிப்புடன் நடித்திருக்கிறேன். அந்த நடிப்பு ரசிகர்களுக்கு பிடிக்கும் என்று நம்புகிறேன்.

இந்தப் படம் பெரம்பூரின் கலாசாரத்தையும், குறிப்பாக ஆங்கிலோ-இந்திய சமூகத்தின் வாழ்க்கை முறையையும் மிகவும் அழகாக பதிவு செய்துள்ளது. அவர்கள் எவ்வளவு அன்பானவர்கள், முன்னேற்ற சிந்தனை கொண்டவர்கள் என்பதை இந்தப் படம் சொல்லும். 'அன்பே டயானா' ஒரு முழுமையான குடும்பப் பொழுதுபோக்கு திரைப்படம். என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !