வெளியாகும் புதிய படங்களில் 'முதல்வர் விஜய்க்கு' நன்றி கார்டு
தமிழ் சினிமாவிலிருந்து அண்ணாதுரை, கருணாநிதி, எம்ஜிஆர், விஎன் ஜானகி, ஜெயலலிதா, ஆகியோரது வரிசையில் இரண்டு மாதங்களுக்கு முன்பு நடிகர் விஜய் தமிழக முதல்வராகப் பதவியேற்றுக் கொண்டார்.
யார் முதல்வராகப் பதவியேற்றாலும் கொஞ்ச காலத்திற்கு அவர்களை 'துதி' பாடும் வேலையை தமிழ்த் திரையுலகினர் மிகச் சரியாகச் செய்வார்கள். கட்சி ஆரம்பித்த இரண்டே வருடங்களில் எம்ஜிஆரை விடவும் அதிக வாக்கு சதவீதத்தில் வென்று ஆட்சியைப் பிடித்தார் விஜய். அவருக்கான ரசிகர்களாக சினிமாவிலேயே நிறைய பேர் இருக்கிறார்கள்.
எனவே, விஜய் பதவியேற்ற பின்பு அவரை வாழ்த்துவதில் வஞ்சனை இல்லாமல் செயல்பட்டு வருகிறார்கள் திரையுலகினர். கடந்த இரண்டு மாதங்களாக வெளியாகும் பெரும்பாலான புதிய படங்களில் முதல்வர் விஜய்யை வாழ்த்தி விதவிதமான கார்டுகளை படக்குழுவினர் போட்டு வருகிறார்கள். இன்னும் கொஞ்ச நாளைக்கு இது தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
முதல்வராகப் பதவியேற்ற உடனேயே ஒரு வாரத்திற்கு புதிய படங்களுக்கு காலை 9 மணிக்கு சிறப்புக் காட்சிக்கான நிரந்தர அனுமதியை விஜய் அளித்தார்.
கடந்த ஆட்சிக் காலங்களில் அதற்காக வாராவாரம் சிறப்பு ஆணையைப் பெறும் சூழல் இருந்து வந்தது. இப்போது அது நிரந்தர ஆணையாக மாறிவிட்டது. திரையுலகினருக்கும் இன்னும் பல சலுகைகள் வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை வைத்திருக்கிறார்கள். பலரும் விஜய்யின் தவெக கட்சியில் சேர்ந்து வருகிறார்கள். அதனால், விஜய் அரசின் முதல் பட்ஜெட்டில் சில அறிவிப்புகள் வரவும் வாய்ப்புள்ளது.