உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / ஜனநாயகன் : வெளியீட்டிற்காக கடந்து வந்த பாதை

ஜனநாயகன் : வெளியீட்டிற்காக கடந்து வந்த பாதை

கன்னடத் தயாரிப்பு நிறுவனமான கேவிஎன் புரொடக்ஷன்ஸ் தயாரிக்க, வினோத் இயக்கத்தில், அனிருத் இசையமைப்பில், விஜய், பூஜா ஹெக்டே, மமிதா பைஜு மற்றும் பலர் நடிப்பில் உருவான படம் 'ஜனநாயகன்'.

2026 பொங்கலை முன்னிட்டு ஜனவரி 9ம் தேதி வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. ஆனால், படத்திற்கான தணிக்கை சான்றிதழ் உரிய நேரத்தில் கிடைக்காமல் போனது. அதனால், ரிவைசிங் கமிட்டி, சென்னை உயர்நீதிமன்றம், டில்லி உச்சநீதிமன்றம் என போய் போராடி படத்தின் தணிக்கை சான்றிதழை கடந்த வாரம் பெற்றனர்.

ஜனவரி மாதம் முதல் கடந்த வாரம் வரை இப்படம் கடந்து வந்த பாதை….

2025 டிசம்பர் மாதத்தில் தணிக்கை வாரியத்துடன் சிக்கல்

டிசம்பர் 18, 2025

படத்திற்கு தணிக்கை சான்றிதழ் பெறுவதற்காக தணிக்கை வாரியத்திடம் படம் வழங்கப்பட்டது.

டிசம்பர் 18, 2025

படத்தை 5 பேர் கொண்ட குழுவினர் பார்த்து, படத்திற்கு 27 வெட்டுக்களுடன் கூடிய 'யுஏ' சான்றிதழைப் பரிந்துரைத்தனர் என்ற தகவல் வந்தது.

டிசம்பர் 22, 2025

தணிக்கை வாரியம் பரிந்துரைத்த வெட்டுக்களை சரி செய்து மீண்டும் படத்தை தணிக்கை வாரியத்திடம் ஒப்படைத்தனர். அதேசமயம் ரிவைசிங் கமிட்டியை வேண்டுமானால் பார்க்கும்படி என்றும் தணிக்கை வாரியத்தால் சொல்லப்பட்டது என செய்திகள் வந்தன. அதன் பிறகு ஒரு தணிக்கை உறுப்பினர் படத்தில் இன்னும் சில ஆட்சேபகரமான காட்சிகள் இருப்பதாக முறையிட்டார்.

2026 ஜனவரி மாதத்தில் வழக்கு

ஜனவரி 6

தங்களது படத்திற்கு தணிக்கை சான்றிதழ் வழங்க தணிக்கை வாரியத்திற்கு உத்தரவிட வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் தயாரிப்பு நிறுவனம் வழக்கு.

ஜனவரி 7, 2026

தவிர்க்க முடியாத சூழல் காரணமாகவும், தங்களை மீறிய கட்டுப்பாடுகளாலும் படத்தை ஜனவரி 9 அன்று வெளியிட முடியவில்லை என தயாரிப்பு நிறுவனம் அறிக்கை வெளியிட்டது.

ஜனவரி 9, 2026

வழக்கை விசாரித்த தனி நீதிபதி பி.டி.ஆஷா படத்திற்கு 'யுஏ 16 +' சான்றிதழ் வழங்க உத்தரவிட்டார்.

அன்றே வழக்கை மறுவிசாரணை செய்த அமர்வு நீதிமன்றம் வழக்கைத் தள்ளி வைத்தது.

ஜனவரி 20, 2026

வழக்கை அமர்வு நீதிமன்றம் விசாரணை செய்தது. இரு தரப்பு வாதங்களையும் கேட்டபின் தீர்ப்பு அளிக்காமல் வழக்கைத் தள்ளி வைத்தனர்.

ஜனவரி 27, 2026

மீண்டும் தனி நீதிபதிக்கு வழக்கு மாற்றப்பட்டு விரைவாக விசாரிக்க வேண்டும் என அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டது.

ஜனவரி 16, 2026

தயாரிப்பு நிறுவனம் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்த நிலையில் வழக்கை விசாரித்த நீதிபதி, வழக்கை ஏற்க மறுத்து மீண்டும் சென்னை உயர்நீதிமன்றத்தை அணுகும்படி உத்தரவிட்டார்.

பிப்ரவரி 10, 2026

தணிக்கை சான்றிதழ் தொடர்பாக தயாரிப்பு நிறுவனம் தொடர்ந்த வழக்கை திரும்பப் பெற்றுக்கொள்ள சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கியது. அதைத் தொடர்ந்து வழக்கு திரும்பப் பெறப்பட்டது.

மார்ச் 17, 2026

தமிழகத்தில் சட்டசபைத் தேர்தல் நடைபெற உள்ளதால் ரிவைசிங் கமிட்டி, தேர்தல் ஆணையத்தை அணுகும்படி சொன்னது என செய்திகள் வந்தன.

தமிழக தேர்தல் ஆணையர் இது குறித்து ஆய்வு செய்வதாகவும் தெரிவித்திருந்தார்.

ஏப்ரல் 9, 2026

ஜனநாயகன் படத்தின் திருட்டு பிரிண்ட் இணையதளங்களில் பரவியது. அதைத் தொடர்ந்து வழங்கப்பட்ட புகாரை அடுத்து 6 பேர் கைது செய்யப்பட்டனர்.

ஜூலை 9, 2026

படத்திற்கு தணிக்கை வாரியம் 'ஏ' சான்றிதழை வழங்கியது. அதுவும் 12 வெட்டுக்கள், மாற்றங்களுக்குப் பிறகு நடந்தது.

ஜூலை 15, 2026

ஜனநாயகன் படம் ஜுலை 23ம் தேதி உலகம் முழுவதும் வெளியாகும் என தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !