இந்தியாவில் 140 கோடி, உலகளவில் 6,400 கோடி வசூலைக் கடந்த 'தி ஒடிசி'
கிறிஸ்டோபர் நோலன் இயக்கத்தில் இந்த மாதம் ஜூலை 6ம் தேதி வெளியான ஹாலிவுட் திரைப்படம் 'தி ஒடிசி'. இப்படம் உலக அளவில் தற்போது வரை சுமார் 6400 கோடி ரூபாயை வசூலித்துள்ளது. சுமார் 2400 கோடி ரூபாய் செலவில் இப்படம் தயாரானது.
தற்போது இந்தியாவில் 140 கோடி வசூலைக் கடந்துள்ளது. 2026ம் வருடத்தில் கடந்த ஆறு மாதங்களில் ஒரு ஹாலிவுட் படம் கூட 100 கோடி வசூலைக் கடக்கவில்லை. முதல் படமாக 'தி ஒடிஸி' அமைந்துள்ளது.
இளம் ரசிகர்கள் மத்தியில் இப்படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. இந்தப் படத்திற்காக இந்தியாவிற்கும் நேரில் வந்து சில புரமோஷன் நிகழ்வுகளில் கிறிஸ்டோபர் நோலன் கலந்து கொண்டார்.
கிறிஸ்டோபர் நோலன் இயக்கி இதுவரையில் வெளிவந்த படங்களில், அதிக வசூலைக் குவித்த படங்களின் பட்டியலில் 'தி ஒடிசி' படம் 6வது இடத்தைப் பிடித்துள்ளது. 2012ல் வெளிவந்த 'தி டார்க் நைட் ரைசஸ்' படமும், 2008ல் வெளிவந்த 'தி டார்க் நைட்' படமும் ஒரு பில்லியன் டாலர் வசூலைப் பெற்றுள்ள படங்களாக இருக்கின்றன.
2023ல் வெளிவந்த 'ஓபன்ஹெய்மர்' படம் 975 மில்லியன், 2010ல் வெளிவந்த 'இன்செப்ஷன்' படம் 840 மில்லியன், 2014ல் வெளிவந்த 'இன்டர்ஸ்டெல்லர்' படம் 750 மில்லியன் யுஎஸ் டாலரையும் வசூலித்துள்ளன.