உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / தமிழ் சினிமாவின் பயோபிக் பரிதாபங்கள்

தமிழ் சினிமாவின் பயோபிக் பரிதாபங்கள்

தன் சரிதம் என்று பொருள்படும் பயோபிக் படங்களுக்கு உலகம் முழுக்கவே பெரும் வரவேற்பு உண்டு. ரிச்சர்ட் அட்டன்பரோ இயக்கத்தில் பென் கிங்ஸ்லி காந்தியாக கூடுவிட்டு கூடுபாய்ந்த மகாத்மாவின் சுயசரிதப் படம் [ 1982 ] இன்றுவரை ஈடு இணை சொல்ல முடியாத ஒரு மாஸ்டர் பீஸ். மூன்று மணி நேரத்துக்கும் மேல் ஓடிய அப்படத்துக்கு உலகம் முழுக்க கிடைத்த வரவேற்பு ஹாலிவுட்காரர்களையே மிரள வைத்தது. காந்தி போல் மிரள வைத்த பல நூறு பயோபிக் படங்களின் பட்டியல்கள் இருக்கின்றன.

'கப்பலோட்டிய தமிழன்', 'வீரபாண்டிய கட்டபொம்மன்' போன்ற காவிய காலங்களுக்குப் போகாமல் கடந்த 30 ஆண்டுகால தமிழ் சினிமாவில் பயோபிக் படங்களின் கதை கொஞ்சம் சோகக் கதைதான்.

ஜி.டி.என்



கடந்த வாரம் வெளியான 'ஜி.டி.என்'னிலிருந்து துவங்குவோம். சுமார் 40 கோடி பட்ஜெட்டில் இரு வருடத் தயாரிப்பில் இருந்த இப்படம் 20 சதவிகித வசூலைத் தொடுவதே சிரமம் என்கிறார்கள் விநியோகஸ்தர்கள். பெரும் மேதையான ஜி.டி.நாயுடு குறித்து யார் யாரோ பகிர்ந்து படித்தபோது ஏற்பட்ட சிலிர்ப்பு இப்படத்தில் ஒரு சில காட்சிகளில் கூட இல்லை. மாதவன் தொடங்கி, ஈவே ராமசாமியாக வந்துபோன விஜய் ஜேசுதாஸ் பாத்திரம் வரை எதுவுமே ரசிகர்களை வசீகரிக்கவில்லை. இன்னும் குறிப்பாக, நாயுடு காலத்துக்கு நம்மை கொண்டு செல்வதில் இயக்குநர் தோல்வி அடைந்ததே படத்தின் தோல்விக்கும் காரணமாகிவிட்டது.

இதற்கு முன்னர் 2022ல் இதே மாதவனே இயக்கி நடித்த 'ராக்கெட்ரி த நம்பி எபெக்ட்' என்கிற படத்தின் வசூல் எபெக்ட்டும் ஏறத்தாழ ‛ஜி.டி.என்' கதைதான். சுயசரிதைகளைக் கையில் எடுக்கும்போது அப்பாத்திரம் குறித்த விமர்சனக் கண்ணோட்டங்கள்தான் ரசிகர்களை ஈர்க்கும். இந்தப் படத்திலும் மாதவன் விஞ்ஞானி நம்பி நாராயணின் ரசிகராகவே மாறி படம் இயக்கியதுதான் எபெக்டில் இருந்த டிபெக்ட்..

பாரதி



ஐஏஎஸ் அதிகாரி ஞான ராஜசேகரன் இயக்கத்தில் 2000ல் வெளியான படம் 'பாரதி'. 'நிற்பதுவே நடப்பதுவே', 'மயில் போல பொண்ணு ஒண்ணு' உள்ளிட்ட ராஜாவின் சிலிர்ப்பூட்டும் பாடல்கள் இருந்தன. மகாகவி வாழ்வில் நடந்த பல புரட்சிகரமான காட்சிகளும் படத்தில் இருந்தன. ஆனால் அதை திரைக்கதையாக்குவதில் பரிதாப இடத்தில் இருந்தார் ஐஏஎஸ் அதிகாரி. பாரதியின் இறுதி யாத்திரைக்கு ஒற்றை இலக்கத்தில் ஆட்கள் வந்த சரித்திர துயரம் போலவே இப்படத்துக்கும் ஒற்றை இலக்கத்தில்தான் ரசிகர்கள் வந்தார்கள்.

பெரியார்



இதே ஐஏஎஸ் அதிகாரி 2007ல் ஈவே ராமசாமியின் வாழ்க்கையையும் படமாக்கினார். சத்யராஜ் பெரியாராக நடித்த அப்படத்தில் மணியம்மையாக குஷ்பு நடித்திருந்தார். என்ன காரணத்துக்காக அப்படத்துக்கு இளையராஜா இசையமைக்க மறுத்தார் என்பது இன்றுவரை அலசி ஆராயப்படும் ஹாட் டாபிக். பாரதி போலவே இப்படத்தையும் வெற்றிகரமான திரைக்கதையாக மாற்றுவதில் கோட்டை விட்டிருந்தார் ஐஏஎஸ் அதிகாரி. பெரியார் வசூலில் சிறியவர்தான்.

காமராஜ்



காமராஜர் வாழ்க்கை வரலாற்றுப்படம் 2004ல் வெளியானது. இளையராஜா இசையமைக்க பாலகிருஷ்ணன் இயக்கியிருந்தார். காமராஜராக நடித்திருந்த ரிச்சர்ட் மதுரமும் அவருக்குக் குரல் கொடுத்த நடிகர் எம்.எஸ். பாஸ்கரும் ரசிகர்களை காமராஜருக்கு மிக நெருக்கமாக உணர வைத்தார்கள். இப்படியெல்லாம் ஒரு அரசியல் தலைவர் இருந்தாரா என்று வியப்பூட்டும் பல காட்சிகள் படத்தில் இருந்தன. ஆனால் திரைக்கதையும் இயக்கமும் மிகவும் பலவீனமாக இருந்ததால் அசல் காமராஜர் மக்களைக் கவர்ந்தது போல் இப்படம் கவரவில்லை.

தலைவி



‛தலைவி' ஏ.எல்.விஜய் இயக்கத்தில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு. 2021ல் வெளியான இப்படமும் சுத்தமாக வரவேற்பு பெறவில்லை. ஜெயலலிதா பாத்திரத்தில் நடித்த கங்கனா ரனாவத்தின் நடிப்பும் கூட எடுபடவில்லை.

800



பூஜை போட்ட காலத்திலிருந்து பல காரசாரமான சர்ச்சைகளை எதிர்கொண்ட முத்தையா முரளிதரனின் பயோபிக்கான '800' படமும் தோல்வியையே சந்தித்தது. படத்துக்கு செலவழிக்கப்பட்ட 800ல் வசூலாக வந்து சேர்ந்ததென்னவோ வெறும் நூறுதான்.

தப்பிய சூரரைப் போற்று



இந்த தோல்விகளின் வரிசையில் வெற்றியை ருசித்த ஒரே பயோபிக் படம் சூர்யா, சுதா கொங்கரா கூட்டணியின் 'சூரரைப் போற்று'. ஏர்டெக்கான் ஏர்லைன்ஸ் நிறுவன அதிபரான கோபிநாத்தின் பயோபிக்கான இதில் நிஜ வாழ்க்கையுடன் திரைக்கதை சுவாரசியத்துக்காக பல கற்பனைக் காட்சிகளும் படத்தின் வெற்றிக்குக் காரணம் என்று சொல்லப்பட்டது. ஆக பாதி பயோ… மீதி பிக்ஷன்.

இருவர்



இப்படங்கள் போக இயக்குநர் மணிரத்னமும் தன் பங்குக்கு ஒரு பயோபிக் முயற்சியில் ஈடுபட்டார். அப்படம் 'இருவர்'. முன்னாள் முதல்வர்கள் எம்.ஜியாரும், கருணாநிதியும்தான் அந்த இருவர். ரிலீஸான முதல் நாளே 'இன்று இப்படம் கடைசி' போர்டு கண்ட படுதோல்விப்படம். மட்டுமன்றி எம்.ஜி.ஆரை மட்டும் உயர்த்தி தன்னை விமர்சித்து எடுக்கப்பட்ட படம் என்று கருணாநிதி கோபித்துக் கொண்ட கதைகளும் உண்டு.

பயோபிக் படங்களால் இவ்வளவு, 'என்னடா இது தமிழ் சினிமாவுக்கு வந்த சோதனை'களுக்குப் பின்னரும் தமிழ் ரசிகர்கள் பெரும் ஆவலோடு எதிர்பார்க்கும் பயோபிக் ஒன்று பென்டிங்கில் கிடக்கிறது. அது… உலக சினிமா பயோபிக் பட பட்டியல்களில் முதல் இடத்தில் இருக்கிற 'அமேதியஸ்' படத்தை 30க்கும் மேற்பட்ட முறை பார்த்ததாக பெருமையுடன் சொல்லிக்கொள்ளும் இசைஞானி இளையராஜாவின் பயோபிக்.

இப்போதைய நிலவரம் வரை அப்படத்தை இயக்கவிருப்பவர் 'ராக்கி' முதல் கடந்தவாரம் ரிலீஸாகியிருக்கும் 'டி.சி' வரை வன்முறைக் காட்சிகளின் உச்சம் தொட்ட இயக்குனர் அருண் மாதேஸ்வரன். இவர் இளையராஜாவின் கதையை இயக்கும்போது பட்டாக்கத்தி, துப்பாக்கிகளை கையில் எடுக்காமல் ராஜா தன் ஆர்மோனியப் பெட்டியால் தன் எதிரிகளை எப்படியெல்லாம் துவம்சம் செய்தார் என்று எடுத்து விடுவாரோ என்று நெஞ்சம் கொஞ்சம் படபடவென்று அடித்துக்கொள்ளத்தான் செய்கிறது.

உலகின் முத்து முத்தான பத்து பயோபிக் படங்கள்

1. அமேதியஸ்
2. காந்தி
3. லயன் ஆப் டெசர்ட் [ஒமர் முக்தார் ]
4. பிரேவ் ஹார்ட்
5. லிங்கன்
6. சாப்ளின்
7. அலி [முகம்மது]
8. ஸ்பார்ட்டகஸ்
9. ஷிண்ட்லர்ஸ் லிஸ்ட்
10. தி எலிபென்ட் மேன்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !