உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / சபரிமலையில் படப்பிடிப்பு நடத்த மோகன்லாலுக்கு சிறப்பு அனுமதி

சபரிமலையில் படப்பிடிப்பு நடத்த மோகன்லாலுக்கு சிறப்பு அனுமதி


ஒரு காலத்தில் சபரிமலையில் மூலஸ்தானத்தை தவிர மற்ற எல்லா இடங்களிலும் படப்பிடிப்பு நடத்த அனுமதிக்கப்பட்டு வந்தது. ஆனால் பக்தர்கள் லட்சக் கணக்கில் வரத் தொடங்கிய பிறகு அவர்களுக்கு இடையூறு வரக்கூடாது என்பதற்காக நடைபந்தல் வரை, அதுவும் விரதகாலம் தவிர்த்த நாட்களில் அனுமதிக்கப்பட்டு வந்தது.

இந்த நிலையில் பதினெட்டாம் படி தாண்டி கொடிகம்பம் வரையிலும் படப்பிடிப்பு நடத்த மோகன்லால் படத்திற்கு சிறப்பு அனுமதி வழங்கபபட்டுள்ளது. வருகிற 18, 19 மற்றும் 20 ஆகிய தேதிகளில் படப்பிடிப்பு நடைபெற உள்ளது.

'தொடரும்' படத்திற்குப் பிறகு மோகன்லாலும் தருண் மூர்த்தியும் இணைந்து உருவாக்கும் படத்திற்கு 'அதிமனோகரம்' எனப் பெயரிடப்பட்டுள்ளது. ஆஷிக் உஸ்மான் புரொடக்ஷன்ஸ் சார்பில் ஆஷிக் உஸ்மான் தயாரிக்கிறார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு மோகன்லாலுடன் மீரா ஜாஸ்மின் ஜோடி சேர்ந்துள்ளார். இவர்கள் தவிர, லாலு அலெக்ஸ், மனோஜ் கே.ஜெயன், ஜெகதீஷ், இர்ஷாத், சுதீஷ், உட்பட பலரும் நடிக்கின்றனர். ஜேக்ஸ் பிஜாய் இசையமைக்கிறார். ஷாஜிகுமார் ஒளிப்பதிவு செய்கிறார்.

இந்த படத்தில் லாவுலாஜன் என்ற காவல்துறை உதவி ஆய்வாளர் கதாபாத்திரத்தில் மோகன்லால் நடிக்கிறார். ஐயப்பன் மீது அதீத பக்தி கொண்ட ஒரு போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் வாழ்க்கையில் எதிர்கொள்ளும் சவால்கள் மற்றும் தனிப்பட்ட வாழ்வில் நிகழும் சம்பவங்கள்தான் படம். படப்பிடிப்புக்காக வனத்துறை உட்பட 10க்கும் மேற்பட்ட அரசுத் துறைகளின் அனுமதி பெற்று இந்த சிறப்பு அனுமதியை பெற்றுள்ளனர்.

சினிமாவின் முழு ஸ்கிரிப்டையும் தேவஸ்தானத்திடம் ஒப்படைக்க வேண்டும், சபரிமலை ஐயப்ப சுவாமி கோயில் வழிபாடுகள், சடங்குகள், நம்பிக்கைகள் உள்ளிட்டவற்றை கேலி செய்யும் வகையில் காட்சிகள் இடம்பெறக் கூடாது. கோயில் ஆசாரங்களை மீறும் வகையில் செயல்படக் கூடாது. படப்பிடிப்புக்காக குறிப்பிட்ட தொகையை படக்குழுவினர் தேவஸ்வம் போர்டுக்கு செலுத்த வேண்டும், என்று தேவஸம் போர்ட் நிபந்தனை விதித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !