பிளாஷ்பேக்: ஸ்ரீதேவியின் முத்தான நடிப்பு, முடிவில்லா கலை ஆர்வம். முழுமையாய் வெளிப்படுத்திய “மூன்றாம் பிறை”
தென்னிந்தியத் திரையுலகம் மற்றும் பாலிவுட் திரையுலகு என இரண்டிலும், ஆண் உச்ச நடிகர்களுக்கு இணையாக, ஒரு பெண் திரை ஆளுமையாக அரை நூற்றாண்டு காலம், வெள்ளித் திரையை அலங்கரித்திருந்த தங்கத் தாரகை நடிகை ஸ்ரீதேவிக்கு இன்று (ஆக.,13) 63வது பிறந்தநாள்.
60 வயதைக் கடந்திருக்கும் இன்றைய அநேகரின் இதயங்களை, அன்று அநாயசமாக கொள்ளை கொண்டு, ஓர் அழகுப் பதுமையாக ஆராதிக்கப்பட்டு, அபூர்வ திரை நட்சத்திரமாக அடையாளப் படுத்தப்பட்டவர்தான் இவர். “மூன்று முடிச்சு” என்ற திரைப்படத்தில் முழுமுதல் நாயகி என்ற அவதாரம் கண்ட இவர், “மூன்றாம் பிறை”யில் முழுமை பெற்ற திரைக்கலைஞராக, பார்ப்போரின் விழி பிதுங்க, விண்ணை முட்டும் நடிப்பை வழங்கி, விஜி என்ற கதாபாத்திரத்தில் வியக்க வைக்கும் நடிப்பை வழங்கி, அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியிருப்பார்.
படத்திற்கான திட்டமிடலின் போதே, படத்தின் நாயகன் நடிகர் கமல்ஹாசன் என்பது இயக்குநரால் தீர்மானிக்கப்பட்ட ஒன்றாக இருக்க, படத்தின் நாயகி கதாபாத்திரத்திற்கு முதலில் தேர்வு செய்யப்பட்டிருந்தவர் நடிகை ஸ்ரீப்ரியா. ஆனால் அப்போது அவரால் அந்த வாய்ப்பை ஏற்றுக் கொள்ள முடியாத அளவிற்கு அவர் பிஸியாக இருந்த காரணத்தால், வேறு நாயகியை நடிக்க வைக்க படக்குழுவினர் முயற்சித்திருந்தபோது, நடிகர் கமல்ஹாசன்தான் இந்தக் கதாபாத்திரத்திற்கு நடிகை ஸ்ரீதேவி சரியாக இருப்பார் என்ற யோசனையைக் கூறியிருக்கின்றார்.
அதன்படி நடிகை ஸ்ரீதேவி படத்தின் நாயகியாக ஒப்பந்தமானார். ஒரு விபத்தின் காரணமாக நினைவாற்றலை இழந்து, குழந்தையாக மாறும் நாயகியாக நடிகை ஸ்ரீதேவியும், நாயகியைக் காப்பாற்றும் இளைஞனாக நடிகர் கமல்ஹாசனும் நடித்திருந்த இத்திரைப்படம், நடிகை ஸ்ரீதேவியின் நடிப்பாற்றலையும், அவரது உடல் மொழியையும் வேறொரு பரிமாணத்தில் காட்டச் செய்து, கலையுலகில் அவர் அடுத்தகட்ட உச்சத்தை எட்டிப் பிடிக்க ஏதுவாக அமையச் செய்த ஒரு அரிய திரைக்காவியமாகவும், அவரது திரைப்பயணத்தில் மறுக்கவோ, மறக்கவோ இயலாத ஒரு முத்தான திரைப்படமாகவும் உருவாகியதுதான் இந்த “மூன்றாம் பிறை”.
“சத்யஜோதி பிலிம்ஸ்” என்ற தயாரிப்புப் பதாகையின் கீழ், தயாரிப்பாளர் ஜி தியாகராஜன் தயாரிக்க, கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் மற்றும் ஒளிப்பதிவு ஆகியவற்றை இயக்குநர் பாலுமகேந்திரா கையாள, படத்திற்கு இசை வடிவம் தந்திருந்தார் இசைஞானி இளையராஜா. படத்தின் பாடல்கள் மற்றும் பின்னணி இசையில் ஒரு இசை ராஜாங்கமே படைத்திருப்பார் இளையராஜா.
“கண்ணே கலைமானே கண்ணின் மணியென கண்டேன் உனை நானே” என கவிஞர் கண்ணதாசன் தனது கடைசி காவிய வரிகளை கலையுலகிற்காக பதிவு செய்துவிட்டுச் சென்ற கடைசி திரைப்படமாக வெளிவந்ததும் இந்த “மூன்றாம் பிறை” திரைப்படமே. சிறந்த நடிகருக்கான தேசிய விருது நடிகர் கமல்ஹாசனுக்கும், சிறந்த ஒளிப்பதிவாளருக்கான தேசிய விருது இயக்குநர் பாலுமகேந்திராவிற்கும் வழங்கி சிறப்பித்திருந்த தேசிய விருது தேர்வுக்குழு, சிறந்த நடிகைக்கான தேசிய விருது ஸ்ரீதேவிக்காக வழங்காமல் போனது துரதிர்ஷ்டமாக இருந்தாலும், அந்த ஆண்டின் சிறந்த நடிகைக்கான தமிழ்நாடு அரசு சினிமா விருது ஸ்ரீதேவிக்கு வழங்கப்பட்டிருந்தது என்பது ஆறுதலான ஒன்றாக இருந்தது. அந்த வருடத்தின் சிறந்த நடிகைக்கான தேசிய விருது “அர்த்” என்ற ஹிந்தி திரைப்படத்தில் நடித்திருந்த ஹிந்தி நடிகை ஷபானா ஆஸ்மிக்கு வழங்கப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
1982ம் ஆண்டு வெளிவந்த இத்திரைப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் மாபெரும் வெற்றியைப் பெற்று, திரையரங்குகளில் ஓராண்டுக்கும் மேலாக ஓடிய திரைப்படம் என்ற பெருமையையும் பெற்றிருந்ததோடு, ஹிந்தியிலும் “சத்மா” என்ற பெயரில் கமல்ஹாசன், ஸ்ரீதேவி, சில்க் ஸ்மிதா போன்ற முக்கிய திரைக்கலைஞர்களே அந்தந்த கதாபாத்திரங்களில் நடிக்க, அங்கும் நல்ல வரவேற்பைப் பெற்று, நடிகை ஸ்ரீதேவிக்கு பாலிவுட் திரைக்கதவுகள் திறக்க காரணமாக அமைந்த திரைப்படமும் இந்த “மூன்றாம் பிறை” என்றால் அது மிகையன்று.