பிளாஷ்பேக்: முதல் நட்சத்திர மிமிக்ரி கலைஞர்
இன்றைய காலகட்டத்தில் மிமிக்ரி கலைஞர்கள் பலர் அந்த திறமையை கொண்டே சினிமா நடிகர்களாகி இருக்கிறார்கள். சிவகார்த்திகேயன், மணிகண்டன், ரோபோ சங்கர், சின்னி ஜெயந்த், மயில்சாமி, உள்ளிட்ட பலரை இதற்கு உதாரணமாக சொல்லலாம். தமிழ் சினிமாவின் முதல் நட்சத்திர மிமிக்ரி கலைஞர் சதன்.
அன்றைக்கிருந்த நடிகர்களை போன்று மேடையில் பேசி புகழ் பெற்றவர் இவர். அது மட்டுமில்லாம், பறவைகள், விலங்குள் போன்று சத்தம் எழுப்புபவருமாக இருந்தார். இவரை கண்டுபிடித்த அன்றை இசை அமைப்பாளர்கள் பாடலின் இடையே வரும் பறவைகள், விலங்குள் சத்தத்திற்காக இவரை பயன்படுத்த தொடங்கினர். பிரபலமான 'போனால் போகட்டும் போடா' பாடலில் வரும் ஆந்தை, நரி, பேய்க் குரலெல்லாம் சதனுடையது தான்.
பின்னர் அவர் சினிமாவில் காமெடி நடிகராக நடிக்கத் தொடங்கினார். தென்னிந்திய மொழிகளில் 200க்கும் மேற்பட்ட படங்களில் காமெடியனாக நடித்தார். 'உயிரா மானமா, எதிர் வீட்டு ஜன்னல், பட்டிக்காடா பட்டணமா, தேன்கிண்ணம், படிக்காத மேதை போன்றவை இவர் நடித்த முக்கியமான படங்களில் சில. தமிழை விட மலையாளத்தில் அதிக படங்களில் நடித்தார்.
1980 காலகட்டங்களில் மிமிக்கிரிக்குத் தேவை குறைந்தது. விலங்கு பறவை சத்தங்கள் நேரடியாக பதிவு செய்யப்பட்ட ஒலிபேழைகள் வெளிநாட்டில் இருந்து கிடைக்கத் தொடங்கியது. இதனால் சினிமாவில் இருந்து புறக்கணிக்கப்பட்டார் சதன். சென்னை, வடபழனியில் குடும்பத்துடன் வசித்து வந்த இவர் 1992ம் ஆண்டு காலமானார். தனது இறுதி காலகட்டத்தை வறுமையில் கழித்தார்.