பிளாஷ்பேக் : பாடலையும், நாதஸ்வரத்தையும் இணைத்த தொழில்நுட்பம்
1962ம் ஆண்டு வெளியான 'கொஞ்சும் சலங்கை' படம் பல தொழில்நுட்ப புரட்சியை ஏற்படுத்தியது. குறிப்பாக நாட்டியம் மற்றும் பாடலை அடிப்படையாக கொண்ட இந்தப்படம் டெக்னிக் வண்ணத்தில் உருவானது. இந்த படத்தில் இடம் பெற்ற முக்கியமான பாடலான 'சிங்காரவேலனே தேவா...' என்ற பாடல் சாகாவரம்பெற்ற பாடலாக இப்போதும் ஒலித்துக் கொண்டிருக்கிறது. இந்த பாடல் மூலமாகத்தான் எஸ்.ஜானகி பாடகியாக தமிழில் அறிமுகமானார்.
இப்போதெல்லாம் பாடகர்கள் யாரும் ஸ்டூடியோவிற்கு செல்வதில்லை. தங்கள் வீட்டின் ஒரு அறையில் அமைத்திருக்கும் ரிக்கார்டிங் ஸ்டூடியோவில் தங்கள் டிராக்கை பாடி அனுப்பி விடுவார்கள். இசை அமைப்பாளர்கள் அதை மற்ற பாடகர்களின் குரலோடு இணைத்து, இசை அமைத்து விடுவார்கள். இன்றைக்குள்ள இந்த தொழில்நுட்பத்தை அன்றைக்கே பயன்படுத்திய படம் 'கொஞ்சும் சலங்கை'.
கதைப்படி பாடகியான சாவித்ரி பாடலை பாடுவார். அந்த பாடலை நாதஸ்வர கலைஞரான ஜெமினி கணேசன் தனது நாதஸ்வரத்தில் இசைப்பார் என்பது பாடலுக்கான சூழல். இந்த பாடல் மும்பையில் பதிவு செய்யப்பட்டது. பாடலில் இடம்பெற்ற நாதஸ்வர இசையை ஒலித்த காருகுறிச்சி அருணாசலம் தன்னால் மும்பை வரமுடியாது. அங்குள்ள தட்பவெட்ப சூழ்நிலையை தனது மூச்சு காற்றை மாற்றிவிடும் என்று மறுத்து விட்டார். இதனால் அவரை சென்னையில் உள்ள ராமன் ஸ்டூடியோவிற்கு அழைத்து சென்று நாதஸ்வர இசை பதிவு செய்யப்பட்டது. பின்னர் இந்த இரண்டும் மும்பையில் உள்ள ராமன் ஸ்டூடியோவில் இணைக்கப்பட்டது.
படத்திற்கு எம்.எஸ்.சுப்பையா நாயுடு இசை அமைத்தார். இந்த படத்தின் சில பாடல்கள் 6 முதல் 7 நிமிடங்கள் வரை இருந்தது. படத்தின் இயக்குனநரும், தயாரிப்பாளருமான எம்.வி.ராமன், பாடல் நீளமாக இருந்தால் ரசிகர்கள் எழுந்து வெளியே சென்று விடுவார்கள் என்று கருதி பாடல்களின் நீளத்தை 5 நிமிடமாக குறைத்தார். ஆனாலும் ரெக்கார்டுகளில் 7 நிமிட பாடலாக வெளிவந்து சூப்பர் ஹிட்டாக அமைந்தது.