அடுத்தாண்டு ஜன., 8ல் ‛மகாகாளி' ரிலீஸ்
ஹனு மேன் படத்தை இயக்கிய பிரசாந்த் வர்மாவின் ஆக்கத்தில் தயாராகி வரும் படம் ‛மகாகாளி'. இதை பிரசாந்த் வர்மா சினிமாடிக் யுனிவர்ஸ் பாணியில் உருவாக்கிறார் இயக்குனர் பூஜா அபர்ணா கொல்லூரு. தர்மத்திற்கும், அதர்மத்திற்கும் இடையிலான போர் தான் கதை. அசுரர்களின் வலிமைமிக்க குருவான சுக்ராச்சாரியாரின் தலைமையில் நடைபெறும் போர், ஒட்டுமொத்த உலகின் விதியை தீர்மானிக்கக்கூடிய ஒரு மாபெரும் போருக்கான அறிகுறியாக அமைகிறது. இதை மகாகாளி எப்படி தடுக்கிறார் என்கிற பாணியில் இந்த படம் உருவாகிறது.
சுக்ராச்சாரியராக அக் ஷய் கண்ணா வித்தியாசமான தோற்றத்தில் நடித்துள்ளார். மகாகாளியாக ஸ்ரேயா ரெட்டி நடித்துள்ளார். இன்னும் பிற முக்கிய வேடங்களில் பூமி ஷெட்டி, ரோஹித் ஷரப், குஷ்பு, சமுத்திரக்கனி, முரளி சர்மா, நாசர், பப்லு பிருத்விராஜ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
இந்த படத்தின் வெளியீட்டு தேதியை ஒரு வீடியோக வெளியிட்டுள்ளனர். அதன்படி படம் அடுத்தாண்டு ஜன., 8ம் தேதி பிரமாண்டமாய் தெலுங்கு மட்டுமல்லாது தமிழ், கன்னடம், மலையாளம், ஹிந்தி உள்ளிட்ட மொழிகளிலும் வெளியாகிறது. ஒவ்வொரு மொழிக்கும் இதற்கான வீடியோவை தனித்தனியாக வெளியிட்டுள்ளனர்.