நான் கர்ப்பம் என்று சொன்னவுடன் யஷ் கட்டிபிடித்து கண்ணீருடன் வாழ்த்தினார் : கியாரா அத்வானி
சென்னையில் நடந்த டாக்சிக் பட நிகழ்ச்சியில் நடிகை கியாரா அத்வானி பேசியது... ''நான் சென்னைக்கு வருவது இதுவே முதல் முறை. படம் வெளியாக சில நாட்களே உள்ள நிலையில், என் மனதில் ஒருவித படபடப்பும் ஆர்வமும் கலந்திருக்கிறது. எனது 'நதியா' கதாபாத்திரத்தையும் 'டாக்சிக்' படத்தையும் உங்களிடம் ஒப்படைக்க ஆவலுடன் காத்திருக்கிறேன். ஒளிப்பதிவாளர் ராஜீவ் ரவி எங்களை இதுவரை இல்லாத வகையில் திரையில் காட்டியுள்ளார்.
நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் திறமையான பல பெண் ஆளுமைகள் இணைந்து ஒரே தொலைநோக்குப் பார்வையுடன் பணியாற்றியுள்ளோம். நயன்தாரா லேடி சூப்பர் ஸ்டார் மட்டுமல்ல, மிகச் சிறந்த ஒரு மனிதர். அவருடன் பழகியது என் மனதில் நீங்காத இடத்தைப் பிடித்துள்ளது. ருக்மணி வசந்த்துக்கு மக்கள் கொடுக்கும் அன்பைப் பார்க்கும்போது மகிழ்ச்சியாக உள்ளது, படத்தில் அவரது கதாபாத்திரம் அட்டகாசமாக வந்துள்ளது.
இந்திய சினிமா என்றென்றும் நினைவில் வைத்திருக்கக் கூடிய ஒரு பெயர் 'கீது மோகன்தாஸ்' என்னை ஒரு அச்சமற்ற கலைஞராக மாற்றியதற்கு அவருக்கு நன்றி. அதனால்தான் 'டாக்சிக்கிற்கு முன் கியாரா', 'டாக்சிக்கிற்குப் பின் கியாரா' என்று கூறுகிறேன். யஷ் நம்முடைய ராக்கி பாய், விரைவில் உங்களின் 'ராயா'வாக வரப் போகிறார்.
யஷ் உடன் பணியாற்றுவது ஒரு பெருமை. இந்த படப்பிடிப்பு தளத்தில் நான் கர்ப்பமாக இருந்த செய்தியை குடும்பத்தினருக்கு அடுத்தபடியாக முதலில் யஷிடம் தான் கூறினேன். அப்போது அவர், 'படப்பிடிப்பு எப்படி நடக்கும்?' என்பது பற்றியெல்லாம் யோசிக்காமல், கண்களில் மகிழ்ச்சி கண்ணீருடன் என்னைக் கட்டித்தழுவி வாழ்த்தினார். 'செட்டிற்கு வாருங்கள், உங்களுக்கு என்ன வசதி வேண்டுமோ செய்து கொள்ளுங்கள், விருப்பமானதைச் சாப்பிடுங்கள்; நாம் மிகச் சிறந்த படத்தை எடுப்போம்' என்று கூறினார். அவர் ஒரு அற்புதமான மனிதர்.
இந்தியாவின் சிறந்த கலைஞர்கள் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்களை ஒருங்கிணைத்து இந்திய சினிமாவை உலக அரங்கிற்கு எடுத்துச் செல்வதே இதன் நோக்கம். நான் தமிழில் மணிரத்னம் இயக்கத்தில் நடிக்க மிகவும் ஆசைப்படுகிறேன். 'ஷேர்ஷா' படத்தில் தமிழ் இயக்குநர் விஷ்ணுவர்தனுடன் பணியாற்றியுள்ளேன்; விரைவில் நல்ல வாய்ப்பு வந்தால் கண்டிப்பாக நேரடித் தமிழ்ப் படத்தில் நடிப்பேன்'' என்றார்.