வேலை நிறுத்த முடிவை வாபஸ் பெறுங்கள் : தயாரிப்பாளர்களுக்கு பெப்சி வேண்டுகோள்
'ஒரு படம் வெளியானதிலிருந்து 8 வாரங்களுக்கு பிறகுதான் ஓடிடியில் வெளியாக வேண்டும். இதற்கு ஒப்புக்கொள்ளும் படங்களை மட்டுமே தியேட்டரில் வெளியிடுவோம்' என்று தியேட்டர் அதிபர் சங்கமும், விநியோகஸ்தர்கள் சங்கமும் அறிவித்தது. இது நடைமுறைக்கு வந்தால் தயாரிப்பாளர்களுக்கு ஓடிடி மூலம் கிடைக்கும் வருமானம் பெருமளவில் பாதிக்கும் அதனால் இதனை அனுமதிக்க மாட்டோம் என்று தயாரிப்பாளர் சங்கமும், நடப்பு தயாரிப்பாளர் சங்கமும் அறிவித்தது.
இது தொடர்பான பேச்சுவார்த்தைகள் தோல்வி அடைந்த நிலையில் தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கமும் நடப்பு தயாரிப்பாளர் சங்கமும் இணைந்து செப். 1 முதல் படப்பிடிப்புகள் உள்ளிட்ட அனைத்து பணிகளும் நிறுத்தப்படும் என்று அறிவித்தது. இந்த முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று தென்னிந்திய திரைப்படத் தொழிலாளர்கள் சம்மேளனம் (பெப்சி) வேண்டுகோள் விடுத்துள்ளது.
இது தொடர்பாக பெப்சி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது: தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் தற்போது எதிர்கொண்டு வரும் நிதி நெருக்கடிகள் மற்றும் பல்வேறு சிரமங்களை திரைப்படத் தொழிலாளர்களின் அமைப்பான பெப்சி நன்கு உணர்ந்து வருகிறது. தயாரிப்பாளர்களின் நியாயமான கோரிக்கைகளுக்கும் பிரச்சினைகளுக்கும் உரிய தீர்வு கிடைக்க வேண்டும் என்பதில் எங்களுக்கு எப்போதுமே மாற்றுக் கருத்து இருந்தது இல்லை.
சமீபத்தில் திரையரங்க உரிமையாளர்களுடன் ஏற்பட்டுள்ள கருத்து வேறுபாட்டைத் தீர்ப்பதற்காக செப்டம்பர் 1ஆம் தேதி முதல் திரைப்படங்களை வெளியிட மாட்டோம் என்று அறிவித்த தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் , தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர் சங்கம் படப்பிடிப்புகள் உள்ளிட்ட அனைத்து திரைப்படப் பணிகளையும் கூட செப்டம்பர் மாதம் 1ஆம் தேதி முதல் நிறுத்தப் போவதாக அறிவித்துள்ளது தான் எங்களுக்கு மிகப்பெரிய அதிர்ச்சியை தந்திருக்கிறது
திரைப்படப் படப்பிடிப்புகள் மற்றும் பணிகள் நிறுத்தப்படும்போது, அதன் நேரடி பாதிப்பு தயாரிப்பாளர்களுக்கு மட்டுமல்ல; தினசரி வேலைவாய்ப்பை நம்பி வாழும் ஆயிரக்கணக்கான திரைப்படத் தொழிலாளர்களுக்கும் அவர்களது குடும்பங்களுக்கும் ஏற்படுகிறது.
திரைப்படப் படப்பிடிப்புகள் நிறுத்தப்படும்போது தினசரி வருமானத்தை மட்டுமே நம்பி வாழும் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் உடனடியாகப் பாதிக்கப்படுகிறார்கள். அவர்களைச் சார்ந்து வாழும் குடும்பங்களும் பொருளாதார ரீதியாகப் பாதிக்கப்படுகின்றன என்பதை அனைவரும் கவனத்தில் கொள்ள வேண்டியது அவசியம்.
திரைப்படத் தொழில் என்பது தயாரிப்பாளர்கள், நடிகர்கள், இயக்குநர்கள் ஆகியோரை மட்டுமே சார்ந்தது அல்ல. ஒளிப்பதிவாளர்கள், உதவி இயக்குநர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள், மேக்கப் கலைஞர்கள், ஆடைத் தொழிலாளர்கள், லைட்மேன்கள், செட் தொழிலாளர்கள், போக்குவரத்துத் தொழிலாளர்கள் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான தொழிலாளர்களின் வாழ்வாதாரம் இந்தத் துறையுடன் இணைந்துள்ளது.
எனவே, தயாரிப்பாளர் சங்கம் அறிவித்துள்ள செப்டம்பர் 1 முதல் படப்பிடிப்புகள் உள்ளிட்ட அனைத்து திரைப்படப் பணிகளையும் நிறுத்தும் முடிவை தயவுசெய்து மறுபரிசீலனை செய்யுமாறு பெப்சி சார்பில் அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.