உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / நெகட்டிவ் விமர்சனங்களில் யஷ் : ஆதரவு கொடுத்த சுதீப்

நெகட்டிவ் விமர்சனங்களில் யஷ் : ஆதரவு கொடுத்த சுதீப்

கீது மோகன்தாஸ் இயக்கத்தில், யஷ் நாயகனாக நடித்து சில தினங்களுக்கு முன்பு வெளிவந்த படம் 'டாக்சிக்'. பான் வேர்ல்டு படமாக ஆங்கிலத்திலும் வெளியான இப்படத்திற்கு நெகட்டிவ் விமர்சனங்கள்தான் அதிகமாக வந்துள்ளன. அது படத்தின் வசூலை பெரிதும் பாதித்துள்ளது.

சுமார் 500 கோடிக்கும் அதிகமான பட்ஜெட்டில் உருவான இப்படம் 800 கோடி கடந்து வசூலித்தால் மட்டுமே படம் லாபத்தைத் தரும் என பாக்ஸ் ஆபீஸ் வட்டாரங்களில் தெரிவிக்கிறார்கள். 'கேஜிஎப் 2' மூலம் கன்னடப் படம் ஒன்று 1800 கோடி வசூலைப் பெறக் காரணமாக இருந்தவர் யஷ். அப்படத்தை அடுத்து வெளியாகும் இப்படமும் 1000 கோடி வசூலைக் கடக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

இந்நிலையில் படத்தின் விமர்சனங்களால், வசூலால் யஷ் வருத்தப்படக் கூடாது என்பதற்காக அவருக்கு சீனியர் கன்னட நடிகரான சுதீப் ஆறுதல் பதிவு ஒன்றைப் பதிவிட்டுள்ளார்.

“இதைச் சொல்ல விரும்புகிறேன் யஷ், உங்களின் முந்தைய வணிக ரீதியான மாபெரும் வெற்றிப் படத்தைத் தொடர்ந்து, வழக்கமான மற்றும் எதிர்பார்க்கக்கூடிய அதே பாணியிலான ஒரு படத்தை எடுப்பதற்குப் பதிலாக, முற்றிலும் மாறுபட்ட ஒரு முயற்சியை நீங்கள் உண்மையாகவே மேற்கொண்டிருக்கிறீர்கள்.

இத்தகைய முயற்சியை மேற்கொள்ள மாறுபட்ட மனநிலை, உறுதியான நம்பிக்கை மற்றும் மிக முக்கியமாகத் துணிச்சல் ஆகியவை தேவைப்படுகின்றன. 'டாக்சிக்' ஒரு வித்தியாசமான மற்றும் பாராட்டத்தக்க முயற்சி. இதில் பல பகுதிகள் மிகுந்த ஆர்வத்தைத் தூண்டுவதோடு, ஆழமான விவாதங்கள் மற்றும் கற்றலுக்கான வாய்ப்புகளையும் கொண்டிருக்கின்றன.

மரபுசார்ந்த பாதையிலிருந்து விலகி, புதிய பரிசோதனை முயற்சியை மேற்கொண்டதற்காக உங்களுக்குப் பாராட்டுகள். என் நண்பரே, உங்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகள்,” என்று எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !